×

லத்தூர் ஒன்றியம் கொடூர், கடுகப்பட்டு ஊராட்சிகளில் கிராம சபை கூட்டத்தில் அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகை: மீண்டும் கூட்டத்தை புறக்கணிப்பு செய்ததால் பரபரப்பு

செய்யூர்,  பிப்.6: செய்யூர் தாலுகாவில்  நேற்று 2 கிராமங்களில் நடக்க இருந்த கிராம சபை கூட்டங்களை, கிராம மக்கள் மீண்டும் புறக்கணித்ததோடு, அதிகாரிகளை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த குடியரசு தினத்தையொட்டி அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடந்தன. இதில், சில ஊராட்சிகளில் உள்ள கிராம மக்களின் எதிர்ப்பு காரணமாக கிராம சபை கூட்டம் புறக்கணிக்கப்பட்டது. இதையொட்டி, செய்யூர் தாலுகா லத்தூர் ஒன்றியம் கொடூர் ஊராட்சி கருக்காமலை கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஊராட்சிக்கு அரசு சார்பில் வழங்கப்பட்ட நிதியில் ஊழல் நடந்திருப்பதை காரணம் காட்டி,  அப்பகுதி மக்கள் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்தனர். இந்நிலையில், நேற்று காலை அந்த கிராமத்தில் மீண்டும் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்ட கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஊராட்சி செயலாளரிடம், ஊராட்சி பணிகள், வரவு செலவு கணக்கு குறித்து கேட்டனர். அதற்கு அதிகாரிகள் தரப்பில் முறையான பதில்கள் வரவில்லை.

இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள், அதிகாரிகளை முற்றுகையிட்டு, கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், உரிய விளக்கம் அளிக்கும் வரையில் கிராம சபை கூட்டத்தை புறக்கணிப்பதாக கூறி, அங்கிருந்து வெளியேறினர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல் கடுகப்பட்டு  ஊராட்சியில் விநியோகிக்கப்படும்  குடிநீரில் புழு, பூச்சிகள் வருவதாகவும், அடிப்படை தேவைகள் ஏதும் செய்து தரவில்லை என கடந்த குடியரசு தினத்தி நடக்கவிருந்த கிராம சபை கூட்டத்தை அப்பகுதி மக்கள் புறக்கணித்தனர். இதையடுத்து, நேற்று கிராம மக்களை சமரசம் செய்த அதிகாரிகள், கிராமசபை கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனர். அதன்படி கிராம மக்களும் கலந்துகொண்டனர். ஆனால், பொதுமக்களின் புகாரை பெற அரசுத்துறை அதிகாரிகள் யாரும் கலந்து கொள்ளாததால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் மீண்டும் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால், மேற்கண்ட கிராமங்களில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : General Strike ,Latur Union Kodur ,Gram Sabha Meeting ,
× RELATED சமூகத் தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம்