×

கோவை மாவட்டத்தில் கிராவல் மண் கடத்தல் அதிகரிப்பு

கோவை, பிப்.6:  கோவை மாவட்டத்தில் செட்டிபாளையம், மலுமிச்சம்பட்டி, ஒத்தக்கால் மண்டபம், மயிலேரிபாளையம், நாச்சிபாளையம், பாலத்துறை, வழுக்குபாறை, பிச்சனூர், மதுக்கரை, எட்டிமடை, கந்தேகவுண்டன் சாவடி, கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதியில் இருந்து கட்டிட பணிகளுக்காக கிராவல் மண் பெறப்படுகிறது. கனிம வளத்துறையில் முறையான பர்மிட் பெற்று, உரிய நேரத்தில் வாகனங்களில் கிராவல் மண் எடுத்து செல்லவேண்டும். ஆனால் சிலர் பர்மிட்டை முறைகேடாக பயன்படுத்தி கூடுதல் வாகனங்களில் கிராவல் மண் எடுத்து செல்வதாக தெரிகிறது. கிராவல் மண் எடுக்கும் பகுதி, ஒப்படைக்கும் பகுதிக்கான ரசீதில் குளறுபடி இருந்தாலும் கனிம வள சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால் கனிம வளத்துறையினர் விதிமுறை மீறும் கிராவல் மண் லாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை.

சிலர் இரவு நேரங்களில் கிராவல் மண்ணை கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு, சித்தூர், கொழிஞ்சாம்பாறை உள்ளிட்ட பகுதிகளுக்கு கடத்தி வருகின்றனர். கேரள மாநில எல்லைக்குள் கிராவல் மண்ணை கொட்டி இருப்பு வைத்து விற்பதாக தெரிகிறது. கிராவல் கடத்தல் மண் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் கனிம வளத்துறையினர் மாமூல் வாங்கி விட்டு விடுவதாகவும் புகார் எழுந்துள்ளது. கோவை மாவட்டத்தில் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே கிராவல் மண் கிடைக்கிறது. ஒரே நேரத்தில் பல நூறு டன்னில் கிராவல் மண் தோண்டி கடத்துவதால் பெரும்பாலான பகுதிகள் பள்ளதாக்கு போல் மாறி வருவதாக தெரிகிறது. இதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Coimbatore District ,
× RELATED பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதியில்...