×

டாஸ்மாக் கடையை அகற்ற கோரி சப்-கலெக்டர் அலுவலகம் முற்றுகை

பொள்ளாச்சி,பிப்.4: பொள்ளாச்சி ரயில்வே காலனி செல்லும் வழியில் செயல்படும், டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்த வேண்டும் என, சப்-கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு மனு கொடுத்தனர்.  பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இலவச வீட்டுமனைபட்டா, முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், புதிய ரேஷன் கார்டு, சாதிசான்று, ஆக்கிரமிப்பு அகற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்தனர். அதை சப்-கலெக்டர் வைத்திநாதன் பெற்று, பரிசீலனை செய்தனர்.

 இதில், ரயில்வே காலனி மற்றும் அதன் அருகே உள்ள பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பலர் சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கொடுத்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:- ரயில்வே குடியிருப்பில் வசித்து வரும் எங்களுக்கு, குடியிருப்பு முகப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துகிறது. இந்த டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்தக் கோரி ஏற்கனவே பல முறை புகார் அளிக்கப்பட்டது.   ஆனால், அந்த புகார்  மனுவின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

 கடந்த ஆண்டில் மட்டும் மது அருந்திவிட்டு, அருகே உள்ள ரயில் பாதையில் நடந்து சென்ற  3 பேர் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. எனவே, உடனடியாக அந்த டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags : Siege ,removal ,Sub-Collector's ,
× RELATED மின்மாற்றி வெடித்ததில் ஊழியர்...