×

கல்லட்டி நீர் வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை

ஊட்டி, பிப். 4: ஊட்டி அருகேயுள்ள கல்லட்டி நீர் வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டள்ளது.  ஊட்டியில் இருந்து மசினகுடி வழியாக முதுமலை மற்றும் மைசூர் செல்லும் சாலை உள்ளது. இவ்வழித்தடத்தில் கல்லட்டி மலைப்பகுதியில் நீர் வீழ்ச்சி ஒன்று உள்ளது. இந்த நீர் வீழ்ச்சியில் எப்போதும் தண்ணீர் இருக்காது. பருவமழை காலங்களில் மட்டும் தண்ணீர் அதிகமாக காணப்படும். கடந்த ஆண்டு ஜூலை மாதம் இறுதி வாரத்தில் துவங்கிய மழை சுமார் 4 மாதங்களுக்கு மேல் நீடித்தது.

இதனால், அனைத்து அணைகள், குளங்கள், ஆறுகள்,  நீரோடைகளில் போதுமான அளவு தண்ணீர் உள்ளது. இதனால், கல்லட்டி நீர் வீழ்ச்சியிலும் தண்ணீரும் ஆர்பரித்து கொட்டுகிறது. மசினகுடி மற்றம் முதுமலை செல்லும் சுற்றுலா பயணிகள் இந்த நீர் வீழச்சியை காண அதன் அருகில் செல்கின்றனர். வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இப்பகுதியில் எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை. மேலும், நீர் வீழ்ச்சிக்குள் செல்ல வேண்டாம் என்ற எச்சரிக்கை பலகையும் வைக்கப்படவில்லை. பாதுகாப்பு பணிகளுக்கும் ஆட்கள் நியமிக்கப்படவில்லை. இதனால், அங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் தண்ணீரில் இறங்கும் போது சேற்றில் சிக்கிக் கொள்கின்றனர். கடந்த வாரம் ஊட்டியை சேர்ந்த இரு இளைஞர்கள் இந்த நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்து உயிரிழந்தனர்.

உடல்கள் சேற்றில் சிக்கிக் கொண்டதால் இரு நாட்கள் கழித்தே மீட்க முடிந்தது. அடிக்கடி இந்த நீர் வீழ்ச்சியில் விபத்து ஏற்பட்டு வரும் நிலையில், இங்கு சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் செல்ல தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதை  தொடர்ந்து பாதுகாப்பு கருதி வனத்துறையினர் கல்லட்டி நீர் வீழ்ச்சிக்கு செல்ல தடை விதித்துள்ளனர். கல்லட்டி சோதனை சாவடியில் இருந்து நீர் வீழ்ச்சிக்கு செல்லும் சாலையின் முகப்பு பகுதியில் தடுப்பு அமைக்கப்பட்டு, அங்கு நோ என்ட்ரி என்ற பலகை வைக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED சுற்றுலா பயணிகள் வருகை குறைய வாய்ப்பு