×

செம்பாக்கம் நகராட்சியில் வார்டு மறுவரையறை செய்வதில் குளறுபடி: அதிகாரிகளுடன், அரசியல் கட்சியினர் வாக்குவாதம்

தாம்பரம்: செம்பாக்கம் நகராட்சியில் வார்டு மறுவரையறை செய்வதில் குளறுபடி உள்ளதாக அதிகாரிகளுடன் அரசியல் கட்சியினர் வாக்குவாத்ததில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தாம்பரம் தொகுதிக்கு உட்பட்ட செம்பாக்கம் நகராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இதில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நகராட்சி அலுவலகத்தில் கடந்த 1ம் தேதி வார்டு மறுவரையறை வரைவு வெளியிடப்பட்டது. நேற்று இதனை கண்ட செம்பாக்கம் நகராட்சி பகுதி அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள், இதில் ஏராளமான குளறுபடிகள் உள்ளது எனக்கூறி நகராட்சி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.பின்னர் அதிகாரிகள் அவர்களிடம் 8ம் தேதி வரை கருத்துக்கள் மற்றும் மறுப்புகளை கடிதம் மூலம் தெரிவிக்கலாம். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும். அதில் சட்டப்படி மாற்றங்கள் செய்ய முடிந்தால் அவற்றை சரி செய்யலாம்.இதுகுறித்து அன்றைய கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெளிவாக எடுத்துரைப்பார் என அவர்களை சமாதானம் செய்தார்.ஆனால் ஆளும்கட்சியினரை திருப்திப்படுத்தவே இதுபோன்ற குளறுபடிகள் நகராட்சியில் நடைபெறுகிறது, என அரசியல் கட்சியினர் குற்றம்சாட்டினர்.

இதுகுறித்து அரசியல் கட்சியினர் கூறுகையில், ‘‘வார்டு மறுவரையறையில் நகராட்சி அதிகாரிகள் ஆளும்கட்சியினரை திருப்திப்படுத்தும் விதமாக பல்வேறு குளறுபடிகளை செய்து வருகின்றனர். செம்பாக்கம் நகராட்சியில் தற்போது ஆணையர் இல்லாததே இதற்கு காரணம்.குறிப்பாக செம்பாக்கம் நகராட்சியில் உள்ள 15 வார்டுகளில் ஆளும்கட்சியினருக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் கேட்பது போலவே மறு வரையறையில் நகராட்சி பொறியாளர் மற்றும் நகராட்சி திட்டமிடல் அதிகாரி செய்து கொடுத்துள்ளனர். இவ்வாறு செய்யப்படும் குளறுபடிகளால் பிற கட்சிகளுக்கு அது பாதிப்பை ஏற்படுத்துகிறது.மேலும் வார்டுகளில் சுமார் இரண்டரை கிலோ மீட்டர் தொலைவிலுள்ள தெருக்களை கொண்டு வந்து சேர்த்து வைத்திருப்பதாகவும், எங்கோ உள்ள தெருக்களை எங்கோ உள்ள வார்டுகளில் சேர்ப்பதால் பொது மக்களுக்கும் பாதிப்பு ஏற்படும்.அதுமட்டுமின்றி சில வார்டுகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், சில வார்டுகளில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் என அதிகமாகவும், குறைவாகவும் மாறி மாறி உள்ளது.

இதுபோன்ற அதிகாரிகளின் செயலுக்குப் பின்னால் நகராட்சியில் இதற்கு முன் உயர்பதவியில் இருந்த ஆளும் கட்சியை சேர்ந்த பிரமுகர் என்றும் அவரது அழுத்தத்தினால் அதிகாரிகள் அவருக்கு கட்டுப்பட்டு அவர் சொல்வதை செய்கின்றனர்’’ என தெரிவித்தனர்.
இதுகுறித்து நகராட்சி திட்டமிடல் அதிகாரி கூறுகையில், ‘‘வார்டு மறுவரையறை வரைவு வெளியிடப்பட்டுள்ளது. அதன் மீது பொதுமக்கள் கருத்துக்கள் மற்றும் மறுப்புகளை கடிதம் மூலம் தெரிவிக்கலாம். இதற்கு வருகின்ற 8ம் தேதி கடைசி நாள். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும். மாற்று கருத்து இருந்தால் அவற்றை அந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்கலாம்’’ என்றார்.

Tags : Ward ,municipality ,parties ,
× RELATED சேலம், அணைக்கட்டில் வீடு, வீடாக சென்று...