×

நகராட்சி குடிநீர் ஆதாரமான ஒண்டிப்புலி குவாரியில் 34 அடி மட்டும் தண்ணீர் கோடை மழை பெய்தால் மட்டுமே குடிநீர் பஞ்சமின்றி தப்பலாம்

விருதுநகர், ஜன.31:  விருதுநகர் நகராட்சி கோடை கால நீர்தேக்கங்களில் தண்ணீர் இருப்பு குறைவாக உள்ளதால் கோடை மழை பெய்தால் மட்டும் குடிநீர் விநியோகம் முறையாக செய்ய முடியும் என்ற நிலை உருவாகி உள்ளது. விருதுநகர் நகராட்சியில் உள்ள 80 ஆயிரம் மக்களுக்கான தண்ணீர் தேவையை ஆனைக்குட்டம் அணையின் வெளிப்புற கிணறுகள், ஒண்டிப்புலி, காருசேரி கல்குவாரிகள், கோடைக்கால நீர்தேக்கம், தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் பூர்த்தி செய்கிறது. தற்போதைய நிலவரப்படி ஆனைக்குட்டம் அணை வறண்டு கிடக்கிறது. வெளிப்புற கிணறுகள் மூலம் தினசரி 24 லட்சம் லிட்டர் தண்ணீரும், தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் இருந்து 22 லட்சம் லிட்டர் தண்ணீரும் கிடைக்கிறது. இதன் மூலம் 6 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. வழக்கமாக 100 அடி ஆழம், 400 மீட்டர் நீளமுள்ள ஒண்டிப்புலி குவாரியில் 80 முதல் 90 அடி மழை நீர் தேக்கி வைக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் மே முதல் செப்டம்பர் வரையிலான தண்ணீர் தேவைக்கு பயன்படுத்தப்படும்.

கடந்த ஆண்டு ஒண்டிப்புலி குவாரி பகுதியில் மழையில்லாததால் குவாரியில் தற்போது 34 அடி உயரத்திற்கு மட்டுமே தண்ணீர் உள்ளது. 40 அடி ஆழம், 60 மீ நீளமுள்ள காருசேரி குவாரியில் நடப்பு நிலையில் 20 அடி தண்ணீர் உள்ளது. இரு குவாரிகளின்  தண்ணீரை கொண்டு தாமிரபரணி குடிநீருடன் சேர்த்து ஒன்றரை மாதத்திற்கு மட்டும் பயன்படுத்தப்படும்.ஆனைக்குட்டம் அணையின் வெளிப்புற கிணறுகளில் இருந்து கோடை தண்ணீர் வரத்து இல்லாத போது இரு குவாரிகளும் மே முதல் செப்டம்பர் வரை பயன்பாட்டிற்கு தண்ணீரை வழங்கி வருகின்றன. தற்போது குவாரிகளில் தண்ணீர் மட்டம் குறைவாக இருப்பதால்  மே மாதத்திற்குள் கோடை மழை பெய்து மழைநீர் வந்து சேர்ந்தால் மட்டும் கோடையை தாண்டி தண்ணீர் தேவையை சமாளிக்க முடியும் என்ற நிலை உருவாகி உள்ளது. கோடை மழை தவறும்பட்சத்தில் தாமிரபரணி தண்ணீரையும் குவாரிகளில் எஞ்சி நிற்கும் தண்ணீரை வைத்து நகரின் குடிநீர் தேவை சமாளிப்பதில் சிரமம் ஏற்படும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags : Ondipuli Gwari ,
× RELATED ரயில் நிலையம் புனரமைப்பு