×

பஞ்சம்தாங்கி கண்மாயில் அதிகாரிகள் திடீர் சர்வே ஆக்கிரமிப்பை அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தல்

வருசநாடு, ஜன.31: வருசநாடு அருகே பஞ்சம்தாங்கி கண்மாயில் சர்வே நடைபெற்று வருகிறது. இக்கண்மாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி கரைகளை உயர்த்த வேண்டும் என்று கிராமமக்கள் வலியுறுத்தியுள்ளனர். வருசநாடு அருகே பஞ்சம்தாங்கி கண்மாயில் கடந்த சில மாதங்களாக சர்வே பணி நடந்து வந்தது. தற்போது சர்வே பணி நடைபெற்று வருகிறது, மேலும் கண்மாயின் கரைகளை பலப்படுத்தும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது, இதனால் பல ஆயிரம் ஏக்கரில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு விவசாயிகள் மற்றும் கிராம பொதுமக்கள் ஒன்றுகூடி தாங்களே வரிவசூல் செய்து பஞ்சம்தாங்கி கண்மாயை தூர்வாரியதுடன், கரைகளை பலப்படுத்தும் பணியில் இறங்கினர்.

இந்நிலையில் நிதி பற்றாக்குறையின் காரணமாக, தேனி மாவட்ட கலெக்டரிடம் கிராம பொதுமக்கள் மனு அளித்திருந்தனர் இதனை பெற்றுக்கொண்ட கலெக்டர் பல்லவி பல்தேவ், கடமலை - மயிலை ஒன்றியத்தில் உள்ள அனைத்து கண்மாய்களையும் தூர்வாரி பலப்படுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார். இதனைத் தொடர்ந்து பஞ்சம்தாங்கிகண்மாய் சர்வே பணியும், கரைகளை பலப்படுத்தும் பணியும் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து கிராம பொதுமக்கள் கூறுகையில், வருசநாடு பஞ்சம்தாங்கி கண்மாய் 64.5 ஏக்கர் பரப்பளவை கொண்டது. இதில் தனியார் ஆக்கிரமிப்பு அதிக அளவு உள்ளது. இந்த ஆக்கிரமிப்பை அகற்ற கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். பின்பு கரைகளை பலப்படுத்த வேண்டும் என தெரிவித்தனர்.

Tags :
× RELATED கடமலைக்குண்டு அருகே நிழற்குடையை சீரமைக்க கோரிக்கை