×

நெல் கொள்முதல் செய்வதில் தாமதம் விவசாயிகள் சாலை மறியல்

விருத்தாசலம், ஜன. 31: விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல்லை கொள்முதல் செய்வதில் தாமதப்படுத்துவதாக கூறி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டத்திலேயே மிகப் பெரிய ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் விருத்தாசலத்தில் இயங்கி வருகிறது. இங்கு விருத்தாசலம், கம்மாபுரம், மங்கலம்பேட்டை, திட்டக்குடி, பெண்ணாடம், வேப்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து விவசாயிகள் விளைவிக்கும் விளை பொருட்களை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். இந்நிலையில், தற்போது சம்பா நெல் சாகுபடி முடிவடைந்ததையொட்டி தினமும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் நெல் மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். விவசாயிகள் கொண்டு வரும் மூட்டைகளை விற்பனைக்கு எடுத்துக்கொள்ளாமல் ஒரு வாரம், பத்து நாட்கள் என விவசாயிகளை காத்திருக்க செய்வதால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக கொண்டு வந்த மூட்டைகளை விற்பனைக்கு எடுத்து கொள்ளவில்லை என கூறி நேற்று நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் திடீரென ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் முன், விருத்தாசலம்-கடலூர் நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்து வந்த விருத்தாசலம் சப்-இன்ஸ்பெக்டர் ஆதி மற்றும் போலீசார், மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை சமாதானம் செய்தனர். அப்போது விவசாயிகள், தாங்கள் கொண்டு வந்த நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யாமல் தினசரி 10 அல்லது 15 பேரின் நெல்லை மட்டும் கொள்முதல் செய்கின்றனர். மேலும் நூற்றுக்கணக்கான விவசாயிகளின் மூட்டைகளை தேக்கி வைக்கின்றனர். நாளை(இன்று) வெள்ளிக்கிழமை என்பதால் அடுத்த நாள் சனி, ஞாயிறு விடுமுறை முடிந்து மீண்டும் திங்கட்கிழமை கொள்முதல் செய்யும்போது அதிக அளவில் மூட்டைகள் இருப்பதாக கூறி குறைந்த விலைக்கு நெல் மூட்டைகளை கொள்முதல் செய்வதற்காக கொள்முதலை தாமதப்படுத்தி வருகின்றனர். இதனால் நீண்ட நாட்களாக இங்கேயே தங்குவதால், ஓட்டல்களில் வாங்கி சாப்பிடுவதால் செலவு அதிகமாகுவதுடன், பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி வருகிறோம். இதனால் குடும்பங்களை கவனிக்காமல் போகும் நிலை ஏற்படுகிறது. மேலும் ஒழுங்குமுறை விற்பனை கூட நிர்வாகம் வியாபாரிகளுக்கு துணையாக இதுபோன்ற தாமத பணிகளில் ஈடுபடுகிறது. விவசாயிகளின் நிலை குறித்து கண்டுகொள்வது இல்லை, என குற்றம்சாட்டினர்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட கண்காணிப்பாளரிடம் பேசி முடிவு எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு விவசாயிகள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பும், பரபரப்பும் நிலவியது.


Tags :
× RELATED காதலித்து கர்ப்பமாக்கி திருமணத்துக்கு மறுப்பு