×

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்

களக்காடு, ஜன. 31: குடியுரிமை திருத்த சட்டம் உள்ளிட்ட மக்கள் விரோத சட்டங்களை  கண்டித்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் நேற்று மாலை மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. களக்காட்டில் போலீசாரின் தடையை மீறி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு நாங்குநேரி தொகுதி செயற்குழு உறுப்பினர் காலித் தலைமை வகித்தார். எஸ்டிபிஐ நெல்லை மாவட்ட பொருளாளர் மீராஷா, மாவட்ட வக்கீல் அணி நிர்வாகி முகம்மது ஆரிப் மற்றும் 16 பெண்கள் உள்பட 37 பேர் கலந்து கொண்டனர். அவர்கள், கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தியவாறு குடியுரிமை சட்டத்தை  எதிர்த்தும், அதனை திரும்ப பெற வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பினர்.  கைகளில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு பதாதைகளையும் ஏந்தியிருந்தனர். இவர்களை போலீசார் கைது செய்தனர். தென்காசியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் அப்துல்பாசித் தலைமை வகித்தார். நகர தலைவர் செய்யது அலிபாதுஷா வரவேற்றார். எஸ்டிபிஐ மாவட்ட தலைவர் ஜாபர்அலி உஸ்மானி கண்டன உரையாற்றினார். இதில் நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர். நகர செயலாளர் பாதுஷா நன்றி கூறினார்.ஏர்வாடியில் நடந்த போராட்டத்திற்கு நாங்குநேரி தொகுதி தலைவர் அஷ்ரப்அலி தலைமை வகித்தார். பாப்புலர் பிரண்ட் மாவட்ட பேச்சாளர் காஜா பிர்தவுசி கண்டன உரை ஆற்றினார். மீரான் நன்றி கூறினார். போராட்டத்தில் திரளான பெண்கள் மெழுகுவர்த்தி ஏந்தி கலந்து கொண்டனர். போலீஸ் தடையை மீறி நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட புறநகர் செயலாளர் முகம்மது அமீன், எஸ்டிபிஐ தொகுதி தலைவர் கனி, ஏர்வாடி நகர தலைவர் பீர்முகம்மது உள்ளிட்ட 160 பேரை போலீசார் கைது செய்தனர்.வீரவநல்லூரில் நடைபெற்ற போராட்டத்திற்கு அம்பை தொகுதி தலைவர் ஸலாம் தலைமை வகித்தார். மத்திய அரசின் தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து கையில் மெழுகுவர்த்தி ஏந்தி கோஷங்களை எழுப்பினர். முன்னதாக தேசத்தந்தை காந்திக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்ட செயலாளர் இம்ரான் கண்டன உரை ஆற்றினார். இதில் புறநகர் தலைவர் சிராஜ், எஸ்டிபிஐ மாவட்ட பொதுச்செயலாளர் பீர்மஸ்தான், நகர தலைவர் அப்துல்பாஸித் உள்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். பகுதி செயலாளர் அகமதுயாசின் நன்றி கூறினார்.

Tags :
× RELATED வள்ளியூரில் பைக் திருடிய வாலிபர் கைது