×

தொழில்நுட்பங்களை பயன்படுத்தி காய்கறி, பழங்களை சாகுபடி செய்து அரியலூர் வளத்தை மேம்படுத்த வேண்டும்

தா.பழூர், ஜன. 31: தொழில்நுட்பங்களை பயன்படுத்தி காய்கறி, பழங்களை சாகுபடி செய்து அரியலூர் மாவட்ட வளத்தை விவசாயிகள் மேம்படுத்த வேண்டுமென தா.பழூரில் நடந்த வேளாண் திருவிழாவில் அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் பேசினார். தா.பழூர் அருகே உள்ள சோழன்மாதேவி கிராமத்தில் உள்ள கிரீடு வேளாண் அறிவியல் மையம், வேளாண்த்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் வேளாண் திருவிழா நடந்தது. கலெக்டர் ரத்னா தலைமை வகித்தார். ஜெயங்கொண்டம் எம்எல்ஏ ராமஜெயலிங்கம் முன்னிலை வகித்தார். கனிகள் மற்றும் காய்கறிகள், சத்துக்கள், மருத்துவ குணங்கள் மற்றும் மதிப்பூட்டல் கையேட்டை அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் வெளியிட்டு பேசியதாவது: விவசாயிகளின் விளைச்சலை இருமடங்காக்கி, வருமானத்தை மும்மடங்காக்குவதை நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பான திட்டங்களை அமைத்துள்ளது. அரியலூர் பின்தங்கிய மாவட்டம் என்று கருதப்படும் நிலையில் விவசாயிகள் அரசு திட்டத்தை பயன்படுத்தி புதிய தொழில்நுட்பங்களை கையாண்டு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.

குறிப்பாக அதிக வருமானம் தரக்கூடிய காய்கள் மற்றும் பழங்களை சாகுபடி செய்ய வேண்டும். இந்தியாவிலேயே தமிழ்நாடு பழ உற்பத்தியில் 6வது இடமும், காய்கறி உற்பத்தியில் நான்காமிடமும் பெற்றுள்ளது. ஆனால் இதில் அரியலூர் மாவட்டத்தின் பங்கு குறைவாகும். அரியலூர் மாவட்டத்தில் சொட்டுநீர் பாசனம் அமைப்பதற்காக தமிழக அரசு சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியமும் வழங்கி வருகிறது. அரியலூர் மாவட்டத்தில் பிரதான பயிரான நெல், கரும்பு, மக்காச்சோளம், நிலக்கடலை, பருத்தி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ஆனால் பழங்கள், காய்கறிகள் சாகுபடி குறைவாகவே உள்ளது. எனவே காய்கறிகள் மற்றும் பழங்களின் சாகுபடி தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பயிர் செய்து அரியலூர் மாவட்டத்தின் வளத்தை மேம்படுத்த வேண்டும். விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம் என்றார்.மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சந்திரசேகர், முதுநிலை விஞ்ஞானி (வேளாண் அறிவியல் மையம்) அழகுகண்ணன், கிரீடு வேளாண் அறிவியல் மைய தலைவர் நடனசபாபதி, ஒன்றியக்குழு தலைவர் மகாலட்சுமி, ஊராட்சிக்குழு துணைத்தலைவர் அசோகன், ஊராட்சி தலைவர் ஜெயலட்சுமி, இணை இயக்குனர் (வேளாண்மைத்துறை) கிருஷ்ணமூர்த்தி, துணை இயக்குனர் (தோட்டக்கலைத்துறை) அன்புராஜன், தொழில்நுட்ப வல்லுநர் ராஜ்கலா பங்கேற்றனர்.

Tags :
× RELATED பாடாலூரில் ஆசிரியர்கள் 100 பேருக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி