×

ராஜபாளையத்தில் அதிகாலையில் தீ விபத்து ரூ.2 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம் புகையில் மூச்சுத்திணறி ஒருவர் மயங்கியதால் பரபரப்பு

ராஜபாளையம், ஜன.30: ராஜபாளையம் ஆண்டத்தம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் மகிழம்பூ. பந்தல் அமைப்பாளர். இவரது கடை தென்காசி சாலையில் உள்ள பெரிய மாரியம்மன் கோயில் எதிரில் உள்ளது. கடையின் உள்பகுதியில் அலங்கார பொருட்களை வைத்திருந்தார். கடையின் முன்புறம் பந்தல் அமைக்க பயன்படுத்தும் மூங்கில், சவுக்கு கம்புகள் மற்றும் தென்னைமர கிடுகுகளை வைத்திருந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை, மூங்கில் மற்றும் சவுக்கு கம்புகளில் திடீரென தீ பற்றி எரிய துவங்கியது. காற்றின் வேகத்தில் வேகமாக பரவிய தீ, அருகில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ெதன்னைமர கிடுகுகளிலும் பிடித்தது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இது குறித்து தீயணைப்பு துறைக்கு அப்பகுதிமக்கள் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு தீ அணைப்பு நிலைய அலுவலர் ஜெயராம் மற்றும் தீயணைப்பு வீரர்கள் வந்தனர்.

சுமார் 1 மணி நேரம் போராடி மூங்கில் மற்றும் சவுக்கு மரங்களில் பற்றியெரிந்த தீயை, தீயணைப்புத்துறையினர் அணைத்தனர். இதற்கிடையே தீ விபத்து நடந்த இடத்தின் அருகே உள்ள ஒரு அறையில், அப்பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் புகையில் சிக்கி மயங்கிய நிலையில் கிடப்பது தீயணைப்புத்துறையினருக்கு தெரிய வந்தது. அவரை மீட்ட தீயணைப்புத்துறையினர், ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு டூவீலரும் எரிந்து நாசமானது. தீயில் எரிந்த பொருட்களின் மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. மூங்கில் மற்றும் சவுக்கு கம்புகளில் யாரேனும் திட்டமிட்டு தீ வைத்தார்களா என்பது குறித்து ராஜபாளையம் தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : fire ,Rajapalayam ,
× RELATED ஆம்பூர் தீ விபத்து: 5,000 கோழிகள் உயிரிழப்பு