×

தேவாரம் - போடி நெடுஞ்சாலையில் வாகனங்களை மறிக்கும் முட்புதர்களால் விபத்து

தேவாரம், ஜன.30: தேவாரம் - போடி கிராமப்புற மாநில நெடுஞ்சாலைகளில் முள்புதர்கள் சாலைகளை மறைப்பதால் வாகனஓட்டிகள் தடுமாறுகின்றனர். போடி மாநில நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் போடி, தேவாரம், தம்மிநாயக்கன்பட்டி, லட்சுமிநாயக்கன்பட்டி, திம்மிநாயக்கன்பட்டி, மேலசிந்தலைசேரி, டி.சிந்தலைசேரி, புலிகுத்தி, எர்ணம்பட்டி, உள்ளிட்ட ஊர்கள் வருகின்றன. போடி - தேவாரம் நெஞ்சாலையைத்தவிர கிராமப்புற சாலைகளும் இதன்கட்டுப்பாட்டில் வருகின்றன. அதிகமான அளவில் வாகனங்கள் மாநிலநெடுஞ்சாலையின் வழியே செல்கின்றன. குறிப்பாக டூவீலர்கள், கார்கள், ஜீப்கள் போன்றவை அதிக அளவில் இச்சாலைகளின் வழியே செல்கின்றன.
இவற்றைப் பராமரிப்பில் போடி மாநிலநெடுஞ்சாலைத்துறை கவனம் செலுத்துவது அவசியம்.


கிராமப்புறங்களை ஒட்டிய நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் முள்செடிகள், பார்த்தீனிய செடிகள், கண்களை மறைத்து வளரும் செடி, கொடிகள் அதிகளவில் வளர்கின்றன. இவை இரவு நேரத்தில் வாகனஓட்டிகளுக்கு தெரியாதநிலையில் விபத்துக்களில் சிக்கி வருகின்றனர். எனவே, சாலைகளை பராமரிக்கவும், விபத்து ஏற்படக்கூடிய இடங்களில் தேவையான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், போடி மாநிலநெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆனால் பண்ணைப்புரம், மேலசிந்தலைசேரி, புலிகுத்தி, சில்லமரத்துப்பட்டி, உள்ளிட்ட சாலைகளில் நடவடிக்கை இல்லாததால் விபத்துக்கள்தான் அதிகம் நடக்கிறது. இதுகுறித்து வாகனஓட்டிகள் கூறுகையில், `` முட்செடிகள் அதிகளவில் வளர்கின்றன. கிராமங்களை நோக்கிய பயணம் இரவில் மிக மோசமான ஆபத்தை தருகின்றன. எனவே, நெடுஞ்சாலைத்துறையினர் சாலைகளின் ஓரங்களையும் கவனிக்க வேண்டும்’’ என்றனர்.

Tags : Thevaram - Bodhi Highway Accident ,
× RELATED விதை நேர்த்தி விழிப்புணர்வு