×

கடமலைக்குண்டு கிராமத்தில் மீண்டும் ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெருக்கடி

வருசநாடு, ஜன.30: கடமலைக்குண்டு கிராமத்தில் மீண்டும் ஆக்கிரமிப்பு கடைகளால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. கடமலைக்குண்டு கிராமத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. மேலும் தேனி சாலை ஓரத்தில் இரண்டு புறமும் ஏராளமான கடைகள் அமைந்துள்ளன. இதில் பெரும்பாலான கடைகள் தேனி சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது. இதனால் கடமலைக்குண்டு கிராமத்தில் நாள்தோறும் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் ஏற்படுகிறது.

வாகன ஓட்டிகளின் தொடர் கோரிக்கையை அடுத்து கடந்த ஆண்டு கடமலைக்குண்டு கிராமத்தில் தேனி சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடைகள் இடித்து அகற்றப்பட்டது.  அதன் பின்னர் கடமலைக்குண்டு கிராமத்தில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் காணப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக மீண்டும் தேனி- வருசநாடு சாலையை ஆக்கிரமித்து கடைகள் கட்டப்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதிகளில் சாலையில் அளவு குறுகலாக காணப்படுகிறது.

இதனால் கடமலைக்குண்டு கிராமத்தில் மீண்டும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. சில நேரங்களில் 108 ஆம்புலன்ஸ் வாகனங்களும் இதில் சிக்கிக் கொள்கிறது.  இதேபோல கடமலைக்குண்டு கிராமத்தில் சாலையோரங்களில் டூவீலர், ஆட்டோ, வேன் உள்ளிட்டவற்றை நிறுத்தி வைப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போலீசார் போதிய அளவில் ரோந்து பணிகளை மேற்கொள்ளாததால் ஏராளமான வாகன ஓட்டிகள் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் வகையில் தங்களது வாகனங்களை சாலையிலேயே நிறுத்தி வைக்கின்றனர்.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கடமலைக்குண்டு கிராமத்தில் தேனி சாலையில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும். மேலும் சாலையில் வாகனங்களை நிறுத்திவைக்காதவாறு போலீசார் ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : village ,
× RELATED கடலூர் அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை...