×

கோடை காலம் துவங்குவதால் மாணவர்கள் நலன் காக்க வாட்டர் பெல் திட்டம்: பெற்றோர் கோரிக்கை

திருவள்ளூர், ஜன. 29: கோடை காலம் துவங்குவதால் பள்ளிகளில், குழந்தைகளுக்கு குடிநீர் குடிப்பதற்கு இடைவெளி வழங்கும் நடைமுறையை, கட்டாயமாக செயல்படுத்த கல்வித்துறை அறிவுறுத்த வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு காலையில் பாடவேளையில், பத்து நிமிட இடைவேளை மற்றும் மதிய உணவு இடைவேளை நேரம் வழங்கப்படுகிறது. குழந்தைகள் இந்த நேரங்களில் குடிநீர் குடிப்பது, கழிப்பறை செல்வது மற்றும் மதிய உணவு எடுத்துக்கொள்கின்றனர். குறைந்தபட்சமாக 7 மணி நேரம் பள்ளியில் இருக்கும் குழந்தைகளில் பலரும், உடலுக்கு தேவையான அளவு குடிநீர் எடுத்துக்கொள்வதில்லை. விளையாட்டு, படிப்பு என உடலின் ஆற்றலை பலமடங்கு செலவிடும் குழந்தைகள், மீண்டும் புத்துணர்ச்சி பெற, தேவையான அளவு குடிநீர் குடிக்க வேண்டும் என டாக்டர்கள் ஆலோசனை வழங்குகின்றனர்.

குழந்தைகளின் எதிர்ப்பு சக்தி குறைவது, காய்ச்சல் போன்ற தொற்றுநோய்களால் அதிகம் பாதிக்கப்படுவதும், அவர்கள் குறைவான குடிநீர் அருந்துவது தான் எனவும், டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். இதனால், கேரளா மாநிலத்தில் குழந்தைகள் குடிநீர் குடிப்பதற்கான காலை மற்றும் மாலை நேரங்களில், போதிய இடைவெளி அளித்து, ‘’அலெர்ட் பெல்’’ அடிக்கும் நடைமுறையை பின்பற்றுகின்றனர். தமிழக பள்ளிகளிலும் இந்த நடைமுறையை செயல்படுத்தி, மாணவர்களின் உடல்நலத்தையும் பாதுகாக்க வேண்டும் என கல்வித்துறை அறிவுறுத்தியது.

இருப்பினும், தமிழக பள்ளிகளில் இத்திட்டத்துக்கு போதிய விழிப்புணர்வு இல்லை. குழந்தைகள் பள்ளிகளில் எந்த நேரத்திலும் குடிநீர் குடிப்பதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. இருப்பினும், சில குழந்தைகள் உணவு அருந்தினாலும்கூட, குடிநீர் அருந்தாமல் வீட்டுக்குச் செல்வதும் நடக்கிறது. தற்போது கோடை காலம் துவங்குவதால், குழந்தைகளுக்கு, குறிப்பிட்ட இடைவெளியில் கட்டாயம் குடிநீர் குடிப்பதற்கு ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும். அதனை கண்காணிப்பதோடு, அதற்கான’அலெர்ட் மணி’’ அடித்து, இடைவேளையும் வழங்குவதற்கு, கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED ₹448 கோடி தங்கம், ₹297 கோடி போதைப்பொருள், ₹37...