×

₹448 கோடி தங்கம், ₹297 கோடி போதைப்பொருள், ₹37 கோடி வெளிநாட்டு கரன்சி பறிமுதல் கடத்தல்காரர்களின் கூடாரமாகும் சென்னை விமான நிலையம்: கடந்த 3 ஆண்டுகளில் உச்சம் தொட்ட வழக்குகள்

சென்னை, மே 9: சென்னை விமான நிலையத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் கடத்தி வரப்பட்ட ₹448 கோடி தங்கம், ₹297 கோடி மதிப்புடைய போதைப் பொருட்கள், ₹37 கோடி வெளிநாட்டு பணம், 200க்கும் அதிகமான அரிய வகை உயிரினங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் சென்னை விமான நிலையம் கடத்தல் ஆசாமிகளின் கூடாரமாக மாறியுள்ளதா என கேள்வி எழுந்துள்ளது. சென்னை விமான நிலையத்தில் தங்கம், போதைப் பொருள், வெளிநாட்டு பணம், அரிய வகை வெளிநாட்டு வன உயிரினங்கள் கடத்தல் சம்பவங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. துபாய், அபுதாபி, சார்ஜா, குவைத், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து பெருமளவு தங்கம் கடத்தி வரப்படுகிறது. அதேபோல் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து போதைப் பொருட்கள் அதிக அளவில் கடத்தி வரப்படுகின்றன. மேலும் தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து அரிய வகை வன உயிரினங்கள் கடத்திக் கொண்டு வரப்படுகின்றன.

இதுதவிர, சென்னையில் இருந்து துபாய், சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு வெளிநாட்டு பணம் அதிகளவில் கடத்தப்படுகின்றன. இதுபோன்ற கடத்தல் சம்பவங்களை சென்னை விமான நிலையத்தில், சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி, கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்து, கடத்தல் ஆசாமிகளை கைது செய்து வருகின்றனர். வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்படும் அபூர்வ வகை உயிரினங்களை சுங்கச் சோதனையில் கண்டுபிடித்து, மத்திய வன குற்றப்பிரிவு அலுவலர்கள் உதவியுடன் எந்த நாட்டில் இருந்து கொண்டுவரப்பட்டதோ, அந்த நாட்டுக்கே திருப்பி அனுப்புகின்றனர்.

சென்னை விமான நிலையத்தில் கடந்த 2023 ஏப்ரலில் இருந்து 2024 மார்ச் வரையில், சுங்கத்துறை மட்டும் 878 பயணிகளிடம் 344 கிலோ கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்துள்ளது. அதன் சர்வதேச மதிப்பு ₹184.70 கோடி. மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 11 வழக்குகளில், 132 பேரிடம் (ஓமன் நாட்டில் இருந்து வந்த ஒரே விமானத்தில் 113 பேர்) 96 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதன் சர்வதேச மதிப்பு ₹64 கோடி. மொத்தம் ₹248 கோடி மதிப்புள்ள 440 கிலோ தங்கம் பறிமுதல் செய்துள்ளனர்.

அதேபோல் கொக்கைன், ஹெராயின், மெத்தபெட்டமைன் உள்ளிட்ட போதைப்பொருட்கள் சுங்க அதிகாரிகள் மட்டும் 47 வழக்குகளில் 30.68 கிலோ பறிமுதல் செய்துள்ளனர். அதன் சர்வதேச மதிப்பு ₹140 கோடி. மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் 3 வழக்குகளில் 12 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்துள்ளனர். அதன் சர்வதேச மதிப்பு ₹52 கோடி. 2023-24ல் ₹192 கோடி மதிப்புடைய 42.68 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் சுங்கத்துறையினர் 82 வழக்குகளில் ₹19.44 கோடி மதிப்புடைய வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 18 வழக்குகளில் 150க்கும்‌ மேற்பட்ட உயிரினங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அந்தந்த நாடுகளுக்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. இதேபோல் கடந்த 2022-23ல் சென்னை விமான நிலையத்தில் 738 வழக்குகளில் ₹137.66 கோடி மதிப்புடைய 291 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 42 வழக்குகளில் ₹45 கோடி மதிப்புடைய ₹21.39 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 71 வழக்குகளில் ₹10.47 கோடி வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது. 13 வழக்குகளில் அரியவகையான 60 உயிரினங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, வந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பப்பட்டன.

கடந்த 2021-22ல் சென்னை விமான நிலையத்தில், 332 வழக்குகளில் ₹62.10 கோடி மதிப்புடைய 141.55 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டன. 77 வழக்குகளில் ₹60 கோடி மதிப்புடைய 33.72 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் 60 வழக்குகளில் ₹7.53 கோடி வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டன. 2 வழக்குகளில் 17 வெளிநாட்டு உயிரினங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, வந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டன. இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளோடு ஒப்பிடுகையில், ஒவ்வொரு ஆண்டும் கடத்தல் தங்கம், போதை பொருட்கள், வெளிநாட்டு பணம், அரிய வகை உயிரினங்கள் கடத்தல் சம்பவங்கள் அதிக அளவில் பெருகி வருவது, சென்னை விமான நிலையம் கடத்தல்காரர்களின் புகலிடமாக மாறிவிட்டதா என்ற‌ சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த 3 ஆண்டு புள்ளி விவரங்களில், சென்னை விமான நிலைய சுங்கத்துறை மட்டுமே முழுமையான விவரங்களை வெளியிட்டுள்ளது. மத்திய வருவாய் புலனாய்வு துறையினர், மத்திய போதை தடுப்பு பிரிவு பிரிவினர், அவர்கள் பறிமுதல் செய்த விவரங்களை வெளியிடவில்லை. அதுவும் வெளிவந்தால் கடத்தல்களின் எண்ணிக்கையும், பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், போதைப் பொருட்களின் மதிப்பும் மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது. கடந்த 3 ஆண்டுகளோடு ஒப்பிடுகையில், கடத்தல் சம்பவங்கள் அதிக அளவில் பெருகி வருவது, சென்னை விமான நிலையம் கடத்தல்காரர்களின் புகலிடமாக மாறிவிட்டதா என்ற‌ சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post ₹448 கோடி தங்கம், ₹297 கோடி போதைப்பொருள், ₹37 கோடி வெளிநாட்டு கரன்சி பறிமுதல் கடத்தல்காரர்களின் கூடாரமாகும் சென்னை விமான நிலையம்: கடந்த 3 ஆண்டுகளில் உச்சம் தொட்ட வழக்குகள் appeared first on Dinakaran.

Tags : Chennai Airport ,Chennai ,
× RELATED சென்னை விமான நிலையத்தில் இருந்து...