×

அறுவடை இயந்திரம் தட்டுப்பாட்டால் விளைந்த நெற்கதிர்கள் விவசாய நிலத்திலேயே வீணாகும் அவலம் ராஜபாளையம் பகுதி விவசாயிகள் கவலை

ராஜபாளையம், ஜன. 28: ராஜபாளையம் சுற்றுப்பகுதிகளான சேத்தூர், தேவதானம், சத்திரப்பட்டி, அய்யனாபுரம், உள்ளிட்ட சுற்றுப்பகுதியில் உள்ள கண்மாய்கள் தொடர் மழையின் காரணமாக இந்த ஆண்டு நிரம்பி உள்ளது. இதனால் நெல் விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில், தற்போது விவசாயிகள் அறுவடை பணிகளை துவக்கி உள்ளனர். ஒரே நேரத்தில் பல்வேறு இடங்களிலும் அறுவடை நடைபெறுவதால், இயந்திரம்  கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பொங்கலுக்கு முன்பு அறுவடை பணிகள் முடிக்க வேண்டிய நிலையில், தற்போது நெற்கதிர்கள் முற்றிய நிலையில் நிலத்தில் சாய்ந்து முளைவிட்டு வருகிறது. கடந்த ஆண்டை விட மணிக்கு ரூ.300 வரை வாடகை அதிகரித்தாலும் அறுவடை வாகனம் தட்டுப்பாட்டால் விவசாயிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

இது குறித்து சேத்தூர் பகுதியை சேர்ந்த விவசாயி கணேசன் கூறும்போது, ‘‘இந்த ஆண்டு போதிய மழை பெய்ததால் சிலம்பனேரி, பிறாவடி கண்மாய் உள்ளிட்ட சுற்றுப்பகுதியின் அனைத்து இடங்களிலும் அதிகளவில் நெல் பயிரிட்டுள்ளோம். விளைச்சலும் எதிர்பார்த்த அளவு உள்ளது. தற்போது அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. இதேபோல மாநிலம் முழுவதும் ஒரே நேரத்தில் அனைத்து இடங்களிலும் நெற்கதிர் அறுவடைக்கு தயராக உள்ளதால், அறுவடை செய்யும் இயந்திரங்களுக்கு  தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் விழுப்புரம், ஆத்துார், சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இயந்திரங்கள் வரவழைக்கப்படும். இந்த ஆண்டு பரவலாக அனைத்து இடங்களிலும் தேவை அதிகரிப்பால் பற்றாக்குறை நிலவுவதாக வாகன ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே அறுவடை பருவம் முடிந்து 12 நாட்கள் கடந்த நிலையில், நெற்கதிர்கள் சாய்ந்து நெல் மணிகள் முளைத்து வருகின்றன. பல நாட்களாக வளர்த்த நெற்கதிர்கள் விவசாய நிலத்திலேயே விரயமாவது வேதனையாக உள்ளது. இதேநிலை தொடர்ந்தால் விளைவித்தும் பயனில்லா நிலை ஏற்படும். எனவே இந்த நிலையை போக்க அரசு மாற்று ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

Tags : area ,paddy fields ,Rajapalayam ,land ,
× RELATED ராஜபாளையம் பகுதியில் தென்னை மரங்களில் நோய் தாக்குதல்