×

நீலகிரி மாவட்டத்திற்கு ரூ.3,475 கோடி கடன் திட்ட இலக்கு

ஊட்டி,ஜன.24:நீலகிரி மாவட்டத்துக்கான 2020-2021ம் ஆண்டுக்கான கடன் திட்ட அறிக்கை வெளியிடப்பட்டது. இதில், மாவட்டத்துக்கு ரூ.3 ஆயிரத்து 475 கோடி கடன் திட்ட இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் முன்னோடி வங்கி சார்பில் மாவட்டத்திற்கான கடன் இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. இதில், கடன், விவசாயம் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை மேம்பாட்டிற்கு கடன் திட்டம் ஒதுக்கீடு செய்யப்படுவது வழக்கம். நீலகிரி மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் 2020-2021ம் ஆண்டுக்கான கடன் திட்ட அறிக்கை வெளியிடும் விழா ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கடன் திட்ட அறிகையின் முதல் பிரதியை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டார். சென்னை ரிசர்வ் வங்கி பொதுமேலாளர் ராஜன் பாபு அதனை பெற்றுக் கொண்டார்.

இதில், 2020-2021 ஆண்டிற்கான கடன் திட்ட அறிக்கையின்படி, நீலகிரி மாவட்டத்திற்கான மொத்த முன்னுரிமைக் கடனாக ரூ.3 ஆயிரத்து 475 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், விவசாயம் மற்றும் அதை சார்ந்த தொழில்களுக்கு ரூ.2 ஆயிரத்து 475 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை மேம்பாட்டுக்கு ரூ.441 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர பிற முன்னுரிமைக் கடன்களுக்கு ரூ.559 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019-2020ம் நிதியாண்டில் விவசாயம், அதை சார்ந்த தொழில்களுக்கு ரூ.2 ஆயிரத்து 250 கோடியும், சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை மேம்பாட்டுக்கு ரூ.421 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிற முன்னுரிமைக் கடன்களுக்கு ரூ.461 கோடி என மொத்தம் ரூ.3 ஆயிரத்து 132 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. கடந்த ஆண்டைக் காட்டிலும் வரும் நிதியாண்டு கடன் இலக்கில் ரூ.343 கோடி அதிகரித்துள்ளது. இது 10.95 சதவீதம் அதிகமாகும், என அதிகாரிகள் தெரிவித்தனர்.
 இந்த கூட்டத்தில் முன்னோடி வங்கி மண்டல மேலாளர் ராஜ்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் பாபு, அனைத்து வங்கி அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

Tags : district ,Nilgiris ,
× RELATED கோடை சீசன் எதிரொலி மலை ரயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்