×

மீனாட்சி அம்மன் கோயிலில் தெப்ப திருவிழா 28ம் தேதி துவங்குகிறது பிப்.8ம் தேதி தெப்ப உற்சவம்

மதுரை, ஜன.24:  மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தைப்பூச தெப்பத்திருவிழா வரும் 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வருடம்தோறும் விழாக்கள் நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்வான தெப்பத்திருவிழா வரும் 28ம் தேதி காலை 10.35 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று முதல் மீனாட்சி சுந்தரேசுவரர் பஞ்ச மூர்த்திகளுடன் காலை மற்றும் மாலை நேரங்களில் நான்கு சித்திரை வீதிகளிலும் புறப்பாடாகி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் பிப். 8ம் தேதி நடைபெறுகிறது. அன்று அதிகாலை 5.30 மணியளவில் மீனாட்சிஅம்மன் சுந்தரேஸ்வரர் பஞ்ச மூர்த்திகளுடன் கோயிலில் இருந்து புறப்பாடாகின்றனர். மாரியம்மன் தெப்பக்குளம் சென்று, அங்கு மிக விமரிசையாக அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருகின்றனர். இதன்பிறகு தெப்பம் சேவார்த்திகளால் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. காலையில் 2 முறை சுற்றி வந்தும், மதியம் மீண்டும் ஒரு முறை சுற்றி வந்தும் பிறகு மீனாட்சியம்மன் கோயிலுக்கு வந்து சேரும்.

கோயில் நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‘‘தைப்பூச தெப்ப உற்சவம் வரும் 27ம் தேதி வாஸ்து சாந்தி, 28ம் தேதி கொடியேற்றம், பிப்.2ம் தேதி சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை, பிப்.4ம் தேதி மச்சகந்தியார் திருமணக்காட்சி, பிப்.6ம் தேதி தீர்த்தம், தெப்பம்முட்டுத்தள்ளுதல், பிப்.7ம் தேதி கதிர் அறுப்புத் திருவிழா, 8ம் தேதி தெப்பத்திருவிழா நடக்கிறது. கோயில் உற்வச நாட்களில் கோயில் சார்பாகவோ, உபயதாரர்கள் சார்பாகவே தங்கரத உலா மற்றும் உபய திருக்கல்யாணம் ஆகிய விஷேசங்கள் பதிவு செய்ய இயலாது’’ என்றனர். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் கருமுத்து.கண்ணன் மற்றும் இணை கமிஷனர் நடராஜன் செய்து வருகின்றனர்.

Tags : Teppa Festival ,Meenakshi Amman Temple ,
× RELATED மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விழாவில்...