பார்வை திறன் குன்றியவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து

கடலூர், ஜன. 23: 31வது சாலை பாதுகாப்பு வார விழா கடந்த  20ம் தேதி  துவங்கி வரும் 27ம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி கடலூர் மாவட்டத்தில் விழிப்புணர்வு பேரணிகள், கண்காட்சிகள், சாலை பாதுகாப்பு உறுதிமொழி ஏற்றல், தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், ஓட்டுநர்களுக்கு இலவச மருத்துவ முகாம்கள் நடத்துதல், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விதிகள் குறித்த போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குதல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. . நேற்று கடலூர், சிதம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும், அதேபோல் நெய்வேலி, பண்ருட்டி, விருத்தாசலம் கிளை அலுவலகங்களிலும் ஓட்டுநர்களுக்கு கண் பரிசோதனை முகாம் நடந்தது.

கடலூரில் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு நேற்று வாகனங்களை புதுப்பிக்க வந்தவர்கள் மற்றும் உரிமம் பெற வந்தவர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் கண்களை பரிசோதனை செய்து கொண்டனர். கடலூரில் வட்டார போக்குவரத்து அலுவலர் சரவணன், சிதம்பரத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் முக்கண்ணன் ஆகியோர் கண் பரிசோதனை முகாமை துவக்கி வைத்தனர். அரசு கண் மருத்துவர்கள் ஓட்டுநர்களின் கண்களை பரிசோதித்து சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கினர். இதில் இரவு நேரத்தில் பார்வை திறன் குறைவாக உள்ளவர்கள், நிறக்குருடால் பாதிக்கப்பட்டவர்களின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என வட்டார போக்குவரத்து அலுவலகம் அறிவித்துள்ளது.

Tags :
× RELATED சுருக்குமடி வலை பயன்படுத்தினால் நலத்திட்ட உதவிகள் ரத்து