×

நிர்வாக செலவுகளுக்கு மின்னணு முறையில் பணப்பரிமாற்றம் ஊராட்சி தலைவர், துணைத்தலைவர்களுக்கு இன்று முதல் பயிற்சி

திருவண்ணாமலை, ஜன.22: உள்ளாட்சித் தேர்தலில் ேதர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி தலைவர், துணைத்தலைவர்களுக்கான பயிற்சி முகாம் இன்று முதல் 3 நாட்கள் நடக்கிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில், நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற ஊராட்சி தலைவர்களில், பெரும்பாலானோர் முதன்முறையாக பதவிக்கு வந்துள்ளனர். எனவே, ஊராட்சி நிர்வாகத்தை நிர்வகிப்பதற்கான நடைமுறைகள், செலவின கணக்குகள் பராமரிப்பு, வரிவசூல், திட்ட செயலாக்கம் போன்றவற்றில் அனுபவம் இல்லை. எனவே, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், ஊராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர்களுக்கான சிறப்பு அறிமுக பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பயிற்சி முகாம் இன்று தொடங்கி, வரும் 24ம் தேதி வரை நடக்கிறது. தினமும் காலை 10 மணிக்கு தொடங்கி, மாலை 5.30 மணி வரை பயிற்சி முகாம் நடைபெறும்.

திருவண்ணாமலை வேங்கிக்கால் அரிகரன் திருமண மண்டபத்தில், திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், ஜவ்வாதுமலை ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்தவர்களுக்கு இன்று பயிற்சி முகாம் நடைபெறுகிறது. அதேபோல், துரிஞ்சாபுரம், போளூர், கலசபாக்கம் ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்தவர்களுக்கு நாளையும், செங்கம், புதுப்பாளையம், தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்தவர்களுக்கு வரும் 24ம் தேதியும் பயிற்சி முகாம் நடைபெறும். மேலும், செய்யாறு தாயார் அப்பாய் திருமண மண்டத்தில், ஆரணி, செய்யாறு, வெம்பாக்கம், ஒன்றியங்களுக்கு இன்றும், சேத்துப்பட்டு, தெள்ளாறு, வந்தவாசி ஒன்றியங்களுக்கு நாளையும், பெரணமல்லூர், அனக்காவூர், மேற்கு ஆரணி ஒன்றியங்களுக்கு வரும் 24ம் தேதியும் பயிற்சி முகாம் நடைபெறும்.

இந்த முகாமில், ஊரகப்பகுதிகளின் முழுமையான வளர்ச்சியில் உள்ளாட்சி அமைப்புகளின் பங்கு, திறமையான தலைமையின் மூலம் ஊரகப் பகுதிகளின் மாற்றம், சிறந்த முறையில் ஊராட்சி நிர்வாகம் நடத்துதல், கிராமசபை, ஊராட்சி கூட்டங்கள் நடத்துதல், வேலைகளுக்கான அனுமதி பெறுதல், பணிகள் செயல்படுத்தும் முறை, செலவினம் மேற்கொள்ளும் முறை, பொது நிதி மேலாண்மை, மின்னணு பரிமாற்ற முறையில் பணப்பரிவர்த்தனை செய்தல், குடிநீர் வழங்கல், தெருவிளக்கு பராமரிப்பு போன்றவை குறித்து பயிற்சி அளிக்கப்படும்.

கிராம ஊராட்சிகளில் நிர்வாக செலவினங்களை மேற்கொள்ள இதுவரை காசோலையை (செக்) பயன்படுத்தினர். ஆனால், இனிமேல் காசோலை மூலம் பணபரிவர்த்தனை செய்ய முடியாது. ஆன்லைன் மூலம் மின்னணு பணபரிவர்த்தனை நடைமுறைக்கு வருகிறது. எனவே, இந்த புதிய நடைமுறையை தடையின்றி செயல்படுத்துவதற்காக இந்த பயிற்சி முகாமில், வங்கி அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்று விளக்கம் அளிக்க உள்ளனர்

Tags : vice-presidents ,panchayat ,
× RELATED தமிழக காங்கிரஸ் தலைவரின் அலுவல் பொறுப்பாளர்கள் நியமனம்