×

பெற்றோர் கண்டித்ததால் ஆத்திரம் பள்ளி மாணவிகள் 4 பேர் பெங்களூருக்கு ஓட்டம்

ஆவடி, ஜன. 22: ஆவடியில் உள்ள அரசு பள்ளியில் படித்த 4மாணவிகளை பெற்றோர்கள் கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறி பெங்களூருக்கு சென்றுள்ளனர். அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர். ஆவடி, காமராஜர் நகர் பிரதான சாலையில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு, ஆவடியை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து சுமார் 1500க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர்.  மேலும், இங்கு ஆவடி, நந்தவன மேட்டூர் குமரன் தெருவைச் சார்ந்த மதுமிதா (14), மேல்பாக்கம்,  ஈஸ்வரன் கோயில் தெருவை சேர்ந்த இலக்கியா (14), ஆவடி காமராஜ் நகர் ஆற்றோர தெருவை சேர்ந்த  காயத்ரி (15),  பட்டாபிராம், தண்டுரை, விவசாயி தெருவை சார்ந்த காவியா (14) ஆகியோர் பத்தாம் வகுப்பு பயின்று வருகின்றனர். மேற்கண்ட 4 மாணவிகளும்  நேற்று முன்தினம் காலை வீட்டிலிருந்து பள்ளிக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு புறப்பட்டுள்ளனர். பின்னர், அவர்கள் அனைவரும் மாலை வகுப்பு முடிந்து வீடு திரும்பவில்லை. அவர்களை பெற்றோர்கள்  பல்வேறு இடங்களிலும் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இது குறித்த புகாரின்பேரில் ஆவடி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் காளிராஜ் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். முதற்கட்ட விசாரணையில், மேற்கண்ட 4 மாணவிகளும் சரிவர படிக்காததால் பெற்றோர் கண்டித்து உள்ளனர். இதனை அடுத்து, 4 மாணவிகளும் பள்ளிக்கு செல்லவில்லை  என தெரியவந்தது. பின்னர்,  மாயமான மாணவி ஒருவரது செல்போன் எண்ணை வைத்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, அந்த எண்ணின் டவர் இருக்கும் இடம் பெங்களூரை காட்டியது. இதனை அடுத்து போலீசார், மாணவியின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவர்கள் அனைவரும் பெங்களூரில் இருப்பது உறுதியானது.

இது குறித்து போலீசார் கூறுகையில், வீட்டில் இருந்து புறப்பட்ட 4மாணவிகளும் பள்ளிக்கூடம் முன்பு வந்து உள்ளனர். அதன் பிறகு, அவர்கள் பஸ் மூலம் மெரினா பீச்சுக்கு சென்று கடலில் குளித்து விளையாடி உள்ளனர். பின்னர், சென்ட்ரலில் இருந்து ரயில் மூலமாக பெங்களூர் சென்றுள்ளனர்.
இதனை அடுத்து, எஸ்.ஐ கோகிலா தலைமையில் தனிப்படை போலீசார் அவர்களை அழைத்து வர பெங்களூருக்கு விரைந்துள்ளனர் என்றனர்.  ஆவடியில் ஒரே பள்ளியில் படித்த 4மாணவிகளும் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Parents ,protest ,
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்...