×

பிப். 8ல் தைப்பூச தீர்த்தவாரி நடைபெற உள்ள நிலையில் திறந்தவெளி பாராக மாறிய குளித்தலை கடம்பன்துறை

குளித்தலை, ஜன. 22: கரூர் மாவட்டம் குளித்தலையில் உள்ளது சிவத்தலங்களில் பிரசித்தி பெற்ற கடம்பவனேஸ்வரர் கோயில். காசிக்கு அடுத்து வடக்கு நோக்கி இருக்கும் சிவத்தலங்களில் இதுவும் ஒன்று. இத்தனை சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் வருகிற பிப்ரவரி எட்டாம் தேதி தைப்பூச திருவிழா மற்றும் கடம்பன் துறையில் தீர்த்தவாரி நடைபெற உள்ளது. அப்போது குளித்தலை, பெட்டவாய்த்தலை, அய்யர்மலை, திருங்கோய்மலை, வெள்ளூர், முசிறி, கருப்பத்தூர், ராஜேந்திரம் ஆகிய எட்டு ஊர் சிவ தலங்களிலிருந்து சுவாமி புறப்பாடு நடைபெற்று கடம்பன் துறையில் சந்திப்பு கொடுத்து தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். திருச்சி, கரூர், நாமக்கல், பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த சுவாமி சந்திப்பு மற்றும் தீர்த்தவாரியில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது கடம்பன்துறை குடிமகன்களின் பிடியில் சிக்கி தவிக்கும் அவல நிலை உருவாகி உள்ளது. புனிதமாகப் போற்றப்படும் கடம்பன்துறை அருகே மணல் திட்டில் ஆங்காங்கே மதுபாட்டில்கள் உடைந்த நிலையில் மண்ணில் புதைந்து கிடக்கின்றன. மேலும் சுற்றுப்புற பகுதிகள் புதர் போல் காட்சியளிக்கின்றன. உடனடியாக சம்பந்தப்பட்ட அறநிலைய துறை அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்து தைப்பூச திருவிழா வருவதற்கு முன் கடம்பன்துறை பகுதியில் சுற்றுப்புற சுகாதாரத்தை பேணி காக்கவும், பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாதவாறு மணல் பரப்பில் கி்டக்கும் மது பாட்டில்களை அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Pip ,sea ,Taipusa Tirthavari ,
× RELATED வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி: வானிலை ஆய்வு மையம் தகவல்