சாலை பாதுகாப்பு வாரவிழாவையொட்டி இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி

கிருஷ்ணகிரி, ஜன.21: கிருஷ்ணகிரியில் 31வது சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி, நடந்த இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியில், 1000  பேர் ஹெல்மெட் அணிந்து பங்கேற்றனர். கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில், போக்குவரத்து துறை, காவல் துறை, ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், 31வது சாலை பாதுகாப்பு வார விழா விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை, மாவட்ட எஸ்பி பண்டிகங்காதர் தொடங்கி வைத்தார். ஐவிடிபி தொண்டு நிறுவன தலைவரும், ராமன் மகசேசே விருதாளருமான குழந்தை பிரான்சிஸ், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் வெங்கடேசன், ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது எஸ்பி பண்டிகங்காதர்  பேசியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போக்குவரத்துறை சார்பில் இன்று (20ம்தேதி) முதல் வரும் 27ம் தேதி வரை 7 நாட்கள் மருத்துவ முகாம், கலைநிகழ்ச்சிகள், விழிப்புணர்வு பேரணிகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. மாவட்டத்தில் கடந்த 2019ம் ஆண்டு 1260 விபத்துகள் ஏற்பட்டதில், 354 பேர் இறந்துள்ளனர். 1,601 பேர் காயடைந்துள்ளனர். பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதால், கடந்த 2018ம் ஆண்டை விட 2019ம் ஆண்டில் விபத்து மற்றும் உயிரிழப்பு குறைந்துள்ளது.

இருசக்கர வாகன ஓட்டிகள் ஓட்டுநர் உரிமம் பெற்றும், மது அருந்தாமலும், செல்போன் பேசாமலும் வாகனத்தை இயக்க வேண்டும். 4 சக்கர வாகனத்தில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிந்து, சாலை விதிகளை பின்பற்றி,  விபத்தில்லா மாவட்டம் என்ற இலக்கினை எட்ட ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு எஸ்பி பேசினார். தொடர்ந்து காவல்துறையினர், ஐவிடிபி மகளிர் சுய உதவிக்குழுவினர், ஆட்டோ ஓட்டுநர்கள் 1000 பேர் ஹெல்மெட் அணிந்து பங்கேற்ற இருசக்கர வாகன பேரணி, பெங்களூரு சாலை, 5 ரோடு ரவுண்டானா வரை சென்றடைந்தது. இந்நிகழ்ச்சியில், ஊரக வாழ்வாதார திட்ட இயக்குநர் உமாமகேஸ்வரி, ஏடிஎஸ்பி சக்திவேல், டிஎஸ்பி குமார், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர், போக்குவரத்து கோட்ட மேலாளர் அரவிந்தன், கிளை மேலாளர் இளங்கோவன், ஹர்ஷபாபு, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் செந்தில், அன்புசெழியன், விஜயகுமார், தரணிதரன், பிஆர்ஓ சேகர், ஏபிஆர்ஓ மோகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags :
× RELATED திருத்துறைப்பூண்டியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி