×

பண்டிகை முடிந்து சென்னை திரும்பும் வாகனங்களால் நெரிசலில் சிக்கி தவிக்கும் பரனூர் சுங்கச்சாவடி: போலீசார் பற்றாக்குறையால் மக்கள் அவதி

செங்கல்பட்டு, ஜன.21: பொங்கல் பண்டிகையையொட்டி  தொடர் விடுமுறை விடப்பட்டது. இதையடுத்து சென்னையில் பணிபுரியும் தென்மாவட்டம் மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு செல்லும் மக்களுக்கு ஏதுவாக கூடுதலாக அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. இதில் பல லட்சம் மக்கள், பல்வேறு வாகனங்களில் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர். பொங்கல் பண்டிகையை முடித்து விட்டு, மீண்டும் சென்னை திரும்ப தொடங்கியுள்ளனர். இதையொட்டி, நேற்று வழக்கம்போல் பணிக்கு செல்பவர்களும்  சென்னைக்கு திரும்பினர். அதுபோல் வந்தவர்களின் பஸ், கார் உள்ளிட்ட வாகனங்களால் செங்கல்பட்டு அருகே பரனூர் சுங்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தென்மாவட்டங்களில் இருந்து. சென்னை செல்லும் சாலையில் சுமார் 2 கிமீ தூரத்துக்கு வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன. சுங்கச்சாவடியில்  போக்குவரத்தை கட்டுப்படுத்த போதிய போலீசார் இல்லாததாலும், சங்கச்சாவடி ஊழியர்கள் அனைத்து வாகனங்களுக்கும் கட்டாய கட்டணம் வசூலிப்பதாலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. இதனால் சில வாகனங்கள் விதிமுறைகளை மீறி எதிரும் புதிருமாக சென்றதால், கடும் நெரிசல் ஏற்பட்டது.

விதிகளை மீறுவதால் பாதிப்பு
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், தென் மாவட்டங்களுக்கு சென்ற லட்சக்கணக்கான வாகனங்கள், கடந்த 2 நாட்களாக சென்னை திரும்புகின்றன. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இங்கு போதிய போலீசார் பாதுகாப்பு பணியில் இல்லை. வாகனங்களை ஒழுங்குபடுத்த போலீசார் போதவில்லை. இதையொட்டி செங்கல்பட்டில் இருந்து வண்டலூர், தாம்பரம் செல்வதற்கு 2 முதல் 3 மணிநேரம் ஆகிறது. பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போதிய போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும். 6 வழியிலிருந்து 8 வழியாக அதிகரிக்க வேண்டும். வாகனங்கள், பைக்  செல்ல  தனித்தனியாக அனுமதிக்கவேண்டும் என்றனர்.

Tags : Paranoor Sungachavadi ,
× RELATED செங்கல்பட்டு புறவழிசாலையில் கார் மீது லாரி மோதி விபத்து