×

களியக்காவிளை - ஆரல்வாய்மொழி நெடுஞ்சாலையை சீரமைக்க வலியுறுத்தி நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிடுவோம்: பிரின்ஸ் எம்.எல்.ஏ. அறிவிப்பு

குளச்சல், ஜன. 20: குண்டும் குழியுமான களியக்காவிளை - ஆரல்வாய்மொழி தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க வலியுறுத்தி நாகார்கோவில் கோட்ட பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என பிரின்ஸ் எம். எல். ஏ. அறிவித்துள்ளார். குளச்சல் எம். எல். ஏ. பிரின்ஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, கன்னியாகுமரி மாவட்டம் சர்வ தேச அளவில் பிரசித்திப்பெற்ற சுற்றுலா மையங்களை கொண்ட மாவட்டமாகும். இம் மாவட்டத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சீசன் காலங்களில் இப்பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்படும். இதனால் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் தினமும் பெருமளவில் இயங்குகிறது. தவிர திருநெல்வேலி பகுதிகளிலிருந்து தினமும் ஏராளமானவர்கள் வெளிநாடு செல்வதற்கு திருவனந்தபுரம் விமான நிலையம் செல்வதற்கும், நோயாளிகள் அங்குள்ள ரீஜினல் கேன்சர் சென்டர் செல்வதற்கும் ஆரல்வாய்மொழி - களியக்காவிளை சாலை முக்கிய போக்குவரத்து மார்க்கமாக அமைந்துள்ளது.

இது தவிர உள்ளூர் பொதுமக்களின் போக்குவரத்திற்கும் தினமும் ஏராளமான வாகனங்கள் மேற்கூறிய தடத்தில் இயங்குகின்றன. ஆனால் கடந்த சில மாதங்களாக இந்த சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக மாறியுள்ளது. இந்த சாலையில் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டுனர்கள் மட்டுமன்றி அனைத்து வாகன ஓட்டுனர்களும் கடும் அவதியடைகின்றனர். இரவு வேளைகளில் பல வாகனங்கள் விபத்துகளில் சிக்குகிறது. பைக் ஓட்டுனர்கள் கடும் முதுகு வலிக்கு ஆளாகின்றனர்.  ஆரல்வாய்மொழியிலிருந்து  சுமார் 250 கி. மீ. தூரமுள்ள மதுரை செல்வதற்கு பஸ்சில்  இரண்டரை மணி நேரமாகிறது. ஆனால் மார்த்தாண்டத்திலிருந்து 60 கி. மீ. தூரமுள்ள ஆரல்வாய்மொழிக்கு செல்வதற்கும் இரண்டரை மணிநேரமாகிறது.  பொதுமக்கள் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட இடத்திற்கு செல்ல பயண நேரம் அதிகமாகிறது. மற்றும் கன்னியாகுமரிக்கு வரும் சர்வ தேச சுற்றுலா பயணிகள் சாலைகள் சரியில்லாததால்  குமரி மாவட்டத்தை பார்த்து முகம் சுழித்து செல்கின்றனர்.

இந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி வில்லுக்குறியில் கடந்த செப்டம்பர் மாதம் எனது தலைமையில் நடந்த மறியல் போராட்டத்தின்போது நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் சின்னத்துரை ₹ 26.45 கோடியில் புதிய சாலை போட டெண்டர் விடப்பட்டு ஒப்பந்தம் முடியும் நிலையில் உள்ளது. ஒப்பந்தம் முடிந்ததும் 25 நாட்களுக்குள் சாலை பணி துவங்கும் என உறுதியளித்தார். அவர் உறுதியளித்து 3 மாதங்களுக்கு மேலாகிறது. சாலை பணி தொடங்கப்படவில்லை. இதனால் பொது மக்கள், வாகன ஓட்டுனர்கள் வேதனையடைந்து வருகின்றனர். எனவே இந்த சாலையால் முதுகு வலி வந்தவர்களின் எண்ணிக்கையை கணக்கு எடுத்து காங். சார்பில் வழக்கு தொடரப்படும். மற்றும் சாலையை சீரமைக்க வலியுறுத்தி வரும் பிப்ரவரி மாதம் 1 ம் தேதி நாகர்கோவிலில் உள்ள  நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Engineer ,Highway Department ,Prince ,
× RELATED உடல் பருமன் குறைப்பு...