×

கிடப்பில் கால்வாய் பணிகள் சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

ஆவடி, ஜன. 13: ஆவடி நகராட்சி, பட்டாபிராம் பகுதியில் கால்வாய் பணிகள் 9 ஆண்டுகள் ஆகியும் முழுமையாக முடியாமல் கிடப்பில் போட்டு உள்ளதால் கழிவுநீர் தெருவில் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்கள் நோய் பாதிப்பிற்கு ஆளாகி வருகின்றனர். ஆவடி நகராட்சி, பட்டாபிராம், 44வது வார்டுக்குட்பட்ட சோழன் நகரில் பாண்டியன் தெருவில் 100க்கு மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் பல ஆண்டாக மழைநீர் கால்வாய் இல்லாமல் இருந்தது. இதனை அடுத்து, ஒவ்வொரு ஆண்டும் மழை காலத்தின் போது தெருக்களில் தண்ணீர் தேங்கி குடியிருப்புகளில் புகுந்து விடும். இதனால் குடியிருப்புவாசிகள் அவதிப்பட்டு வந்தனர்.

இது குறித்து, அப்பகுதி மக்கள் சார்பில் நகராட்சி நிர்வாகத்திற்கு கால்வாய் அமைக்க கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் கடந்த 2010ம் ஆண்டு நகராட்சி சார்பில் பாண்டியன் தெருவில் மழைநீர் கால்வாய் அமைக்க பணிகள் தொடங்கியது.  இந்த கால்வாய் பாண்டியன் தெரு - சி.டி.எச் சாலை வரை வந்து நின்றது. இதன் பிறகு, கல்வெட்டு அமைத்து கால்வாய் பணிகளை முழுமை அடைய செய்யாமல் கிடப்பில் போட்டனர். இதனை அடுத்து, கழிவுநீர் செல்ல முடியாமல் சாலையில் தேங்கி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

 இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘பாண்டியன் தெருவில் கால்வாய் பணிகள் முழுமையாக  முடிக்காமல் 9 ஆண்டுக்கு மேலாக  கிடப்பில் கிடக்கிறது. இதனால் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கால்வாயில் செல்ல முடியாமல் சி.டி.எச் சாலை சந்திப்பு அருகில் தெருவில் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக பாதசாரிகள்  நடமாட முடியவில்லை. மேலும், அந்த வழியாக பள்ளி மாணவர்கள் சைக்கிளில் செல்லும் போது கழிவுநீர் தெளித்து சீருடைகள் சேதமாகிறது.  மேலும், தெருவில் தேங்கி நிற்கும் கழிநீரில் இருந்து உற்பத்தியாகும் கொசுக்கள் கடிப்பதால்  பல்வேறு வகையான காய்ச்சல்கள் ஏற்பட்டு மக்கள் அவதிப்படுகின்றனர். இதோடு மட்டுமல்லாமல், மழை காலத்தில் தண்ணீர் செல்ல வழியின்றி தெரு முழுவதும் தேங்கி நிற்கும். இந்த மழைநீருடன் கழிவுநீரும் கலந்து குடியிருப்புகளில் புகுந்து விடும்.

அப்போது பொதுமக்கள் குடியிருப்புகளை காலி செய்து உறவினர் வீடுகளில் தஞ்சம் அடைவார்கள். இப்பிரச்னை தொடர்பாக சமூக ஆர்வலர்கள் பல முறை மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் கூறி உள்ளனர். இருந்த போதிலும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாகவே இருக்கின்றனர்.   எனவே, இனி மேலாவது, மாநகராட்சி அதிகாரிகள் கவனித்து பட்டாபிராம், பாண்டியன் தெருவில் உள்ள கால்வாய் பணிகளை முழுமையாக முடித்து சுகாதார சீர்கேட்டை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Tags : road ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி