×

வளையக்கரணை ஊராட்சி ரேஷன் கடையில் வழங்கும் பொருட்கள் அளவு குறைவு: பொதுமக்கள் குற்றச்சாட்டு

பெரும்புதூர், ஜன. 13:
வளையக்கரணை ரேஷன் கடையில் வழங்கப்படும் பொருட்களின் அளவு எடை குறைவாக இருப்பதாக, பொதுமக்கள் சரமாரி குற்றம்சாட்டுகின்றனர்.
குன்றத்தூர் ஒன்றியம் வளையக்கரணை ஊராட்சியில் வளையக்கரணை, உமையாள்பரனச்சேரி, மதுராபுரி புதுக்கோட்டை  ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த ஊராட்சியில் 600க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த 3 கிராமத்திற்கு தனித்தனியாக ரேஷன் கடை உள்ளது.
தற்போது வளையக்கரணை கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் வழங்கப்படும் சர்க்கரை, அரிசி, கோதுமை, மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருட்களின் அளவு குறைவாக இருப்பதாக பொதுமக்கள் சரமாரியாக குற்றம்சாட்டியுள்ளனர்.

 இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், ‘‘குன்றத்தூர் ஒன்றியம் வளையக்கரணை ஊராட்சிக்குட்பட்ட வளையக்கரணை கிராமத்தில் 200க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு என்று ரேஷன் கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் அரிசி, கோதுமை, சர்க்கரை, மண்ணெண்ணெய் ஆகிய பொருட்கள் வழங்கப்படுகிறது. இதில் சர்க்கரை, மண்ணெண்ணெய், அரிசி ஆகிய பொருட்கள் அளவு குறைவாகவே வழங்கப்படுகிறது. எடை போடும் இயந்திரத்தில் குளறுபடி செய்கின்றனர்.

2 கிலோ சர்க்கரை வாங்கி, வேறு கடையில் உள்ள இயந்திரத்தில் எடை போட்டால், ஒரு கிலோ 700 கிராம் மட்டும்தான் இருக்கிறது. 300 கிராம் குறைவாகவே  உள்ளது. அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொருட்கள் குறைவாகவே வழங்கப்படுகிறது. இதுகுறித்து விற்பனையாளரிடம் கேட்டால், ‘‘இந்த வேலைக்கு நான் சும்மா வரவில்லை பணம் கொடுத்துதான் வந்திருக்கேன். நானும் சம்பாதிக்க வேண்டாமா?’’ என்று வெளிப்படையாக பேசி வருகிறார். மேலும் மிரட்டல் வார்த்தைகளாலும் பேசி வருகிறார்.  இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். தற்போது வழங்கப்படும் பொங்கல் பரிசு பொருட்களின் அளவும் குறைவாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Tags : boutique ration shop ,
× RELATED மாமல்லபுரம் அரசு மருத்துவமனை...