×

பழநி பாலாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடுவதில் குளறுபடி பொதுப்பணித்துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை

பழநி, ஜன. 13: பழநி அருகே பாலாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக விவசாயிகள் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பழநி அருகே பாலாறு-பொருந்தலாறு அணை உள்ளது. 65 அடி உயரம் உள்ள இந்த அணையில் நேற்றைய நிலவரப்படி 54.30 அடிக்கு நீர் உள்ளது. இதன்படி அணையின் மொத்த கொள்ளளவான 1524 மில்லியன் கனஅடி நீருக்கு 973.42 மில்லியன் கனஅடி நீர் உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 65 கனஅடி நீர் விவசாயப் பணிகளுக்காக திறந்து விடப்பட்டுள்ளது. பாலாறு அணையின் பழைய பாசன பகுதியில் மானூர், கோரிக்கடவு, கீரனூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு நெல் சாகுபடிக்காக பழைய பாசன பகுதிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இப்பகுதியில் சுமார் 6 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி நடந்து வருகிறது. இந்நிலையில் மானூர், கோரிக்கடவு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 75க்கும் மேற்பட்ட விவசாயிகள் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பாலாறு அணையின் இடதுபுற கால்வாய் பகுதியில் பாசன பகுதி மிகவும் குறைவு என்றும், இங்கு தண்ணீர் திறந்தால் தங்கள் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்களுக்கு இறுதி காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுமென்றும் முறையிட்டனர்.

நடவு, உழவு, விதைப்பு போன்றவற்றிற்காக ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வரை செலவு செய்துள்ளதால், சாகுபடி காலம் முழுவதும் தண்ணீர் வழங்க வேண்டுமென வலியுறுத்தினர். நீர் இருப்பை கருத்தில் கொண்டு பாலாறு பழைய பாசன பகுதிக்கு தேவையான தண்ணீர் திறந்து விடப்படுமென அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனைத்தொடர்ந்து விவசாயிகள் கலைந்து சென்றனர். திடீர் முற்றுகையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : stream ,
× RELATED விமானத்தில் பயணம் செய்த மாநகராட்சி பள்ளி மாணவர்கள்