×

தலைவர், துணை தலைவர் பதவிகளில் 15 பேர் போட்டியின்றி தேர்வு

ஈரோடு, ஜன. 13:  ஊராட்சி தலைவர், துணை தலைவர் பதவிகளில் 15 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈரோடு மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத்தலைவர், 14 ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள், துணைத்தலைவர்கள் மற்றும் 225 ஊராட்சி துணைத் தலைவர்கள் என மொத்தம் 255 பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இதில் கோபி, அம்மாபேட்டை, நம்பியூர், பவானி, மொடக்குறிச்சி, பவானிசாகர், அந்தியூர், பெருந்துறை ஆகிய 8 ஒன்றியக்குழு தலைவர் பதவிகளை அ.தி.மு.க கைப்பற்றியது. கொடுமுடி, சத்தியமங்கலம், சென்னிமலை, தாளவாடி என 4 ஒன்றியக்குழு தலைவர் பதவிகளை தி.மு.க கைப்பற்றி உள்ளது. ஈரோடு, தூக்கநாயக்கன் பாளையம் ஆகிய 2 ஊராட்சி ஒன்றிய தலைவர், துணை தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஊராட்சி தலைவர், துணை தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் துணை தலைவர் என மொத்தம் 26 பதவிகளுக்கு நேற்று தேர்தல் நடந்ததில் மாவட்ட ஊராட்சி தலைவர், துணை தலைவர் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

இதே போல தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெற்ற 12 ஊராட்சி ஒன்றியங்களில் அம்மாபேட்டை, பவானி, கோபி, கொடுமுடி, மொடக்குறிச்சி, நம்பியூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் போட்டியின்றி தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதே போல துணை தலைவர் பதவிக்கு அம்மாபேட்டை, பவானி, கோபி, கொடுமுடி, மொடக்குறிச்சி, நம்பியூர், தாளவாடி ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களில் போட்டியின்றி துணை தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதே போல தேர்வு செய்யப்பட்டுள்ள 12 ஊராட்சி ஒன்றிய தலைவர்களில் 9 பேர் பெண்கள் என்றும், துணை தலைவர்களில் 4 பேர் பெண்கள் என மொத்தம் 26 பதவிகளில் 14 பேர் பெண் தலைவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Vice Presidents ,
× RELATED தமிழக காங்கிரஸ் தலைவரின் அலுவல் பொறுப்பாளர்கள் நியமனம்