×

திருவெம்பாவை ஒப்புவித்தல் போட்டி

ஈரோடு, ஜன. 13: பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு திருப்பாவை, திருவெம்பாவை ஒப்புவித்தல் போட்டி நடத்த கோயில் நிர்வாகங்களுக்கு இந்து அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் மார்கழி மாதத்தில் திருப்பாவை, திருவெம்பாவை பாடுதல் வழக்கத்தில் இருந்து வருகிறது. வைணவ கோயில்களில் திருப்பாவையும், சைவ கோயில்களில் திருவெம்பாவையும் பாடப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் மாணவ, மாணவியர்களை கலந்து கொள்வதை ஊக்குவிக்கும வகையில் மாவட்ட அளவில் திருப்பாவை, திருவெம்பாவை ஒப்புவித்தல் மற்றும் கட்டுரை எழுதுதல் ஆகிய போட்டிகளை நடத்தும் படி கோயில் நிர்வாகங்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை முதன்மை செயலாளர் பணீந்திரரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் 5ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை 3 பிரிவுகளாக பிரித்து போட்டிகளை நடத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் இப்போட்டிகள் ஈரோடு திண்டல் வேலாயுதசாமி கோயிலில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இப்போட்டிகளில் கலந்து கொள்ள மாணவ, மாணவியர்களின் பெயர் பட்டியலை அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் இந்து சமய அறநிலையத்துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Tags : Thiruvemba Recognition Contest ,
× RELATED கஞ்சா விற்ற வாலிபர் கைது