×

வைராபாளையம் குப்பை கிடங்கில் 48 ஆயிரம் கியூபிக் குப்பை அகற்றம்

ஈரோடு, ஜன. 13:  ஈரோடு வைராபாளையம் குப்பை கிடங்கில் 48 ஆயிரம் கியூபிக் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது. குப்பைகள் அனைத்தும் மார்ச் மாத இறுதிக்குள் அகற்ற திட்டமிட்டுள்ளதாக ஆணையாளர் இளங்கோவன் தெரிவித்தார்.
ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் உள்ள 60 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் வெண்டிபாளையம் மற்றும் காவிரி ஆற்றின் கரையோரத்தில் உள்ள வைராபாளையம் குப்பை கிடங்குகளில் கொட்டப்பட்டு வந்தது. இதனால் அப்பகுதிகளில் குப்பைகள் அதிகமாக குவிக்கப்பட்டு துர்நாற்றம் வீசி வந்தது. வைராபாளையம் குப்பை கிடங்கில் 65 ஆயிரம் கியூபிக் குப்பையும், வெண்டிபாளையம் குப்பை கிடங்கில் 4 லட்சம் கியூபிக் குப்பையும் தேங்கி கிடக்கிறது.
 இந்நிலையில், மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி மாநகராட்சி பகுதிகளில் குப்பை தொட்டிகள் இல்லாத மாநகராட்சியாக உருவாக்க வீடுகள்தோறும் குப்பைகள் சேகரிக்கப்பட்டு 19 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள மைக்ரோ கம்போஸ்டிங் சென்டர் மூலமாக குப்பைகள் உரமாக்கப்பட்டு வருகிறது.

மேலும், காவிரி ஆற்றின் கரையோரத்தில் உள்ள வைராபாளையம் குப்பை கிடங்கில் உள்ள குப்பைகளை அகற்ற முடிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து ரூ.32 கோடி மதிப்பீட்டில் வைராபாளையம் குப்பை கிடங்கில் உரம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. குப்பை கிடங்கில் இருந்து தினசரி குப்பைகளை கொண்டு வந்து இங்கு உரமாக்கி வருகின்றனர். இதனால் தற்போது 48 ஆயிரம் கியூபிக் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது. குப்பைகள் அகற்றப்பட்டு வரும் நிலையில் காவிரி ஆறு விரிந்து காணப்படுகிறது. மீதமுள்ள குப்பைகளை அகற்ற மார்ச் மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இது குறித்து மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கூறியதாவது: மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ், மாநகராட்சி பகுதிகளில் வீடு, வீடாக பேட்டரி வாகனங்கள் மூலமாக குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இந்த குப்பைகள் மைக்ரோ கம்போஸ்டிங் சென்டர் மூலமாக தினசரி 2 முதல் 3 டன் வரை சேகரிக்கப்பட்டு உரமாக்கப்பட்டு வருகிறது. மேலும் வைராபாளையம் குப்பை கிடங்கில் குவித்து வைக்கப்பட்டுள்ள 65 ஆயிரம் கியூபிக் குப்பையில் இதுவரை 48 ஆயிரம் கியூபிக் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது. இந்த குப்பைகள் அனைத்தும் உரமாக்கப்பட்டு விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. விவசாயிகளுக்கு இயற்கையான முறையில் உரம் கிடைப்பதால், விவசாயிகளும் ஆர்வத்துடன் வந்து வாங்கி செல்கின்றனர். குப்பைகள் அனைத்தும் மார்ச் மாத இறுதிக்குள் அகற்றப்படும். அதற்கு பிறகு இந்த இடத்தில் குப்பைகள் கொட்டப்படாமல் பாதுகாக்கப்படும். மேலும் காவிரி ஆற்றில் குப்பை கழிவுகள் ஏதும் கலக்காமல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதையடுத்து வெண்டிபாளையத்தில் உள்ள குப்பை கிடங்கில் உள்ள குப்பைகளையும் அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

Tags : garbage warehouse ,Wairarapalayam ,
× RELATED சென்னையில் பறிமுதல் செய்யப்பட்ட 9.6 டன்...