×

திருப்புத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் தலைவர்-துணைத்தலைவர் பதவியை திமுக கைப்பற்றியது

திருப்புத்தூர், ஜன. 12: சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றியக்குழு தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவியை திமுக கைப்பற்றியது. தமிழகத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 13 ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தலில், திமுக 9 இடங்களையும், காங்கிரஸ் ஒரு இடத்தையும் கைபற்றியது. மேலும் அதிமுக 2 இடங்களையும், சுயேச்சை ஒரு இடத்தையும் கைப்பற்றியது. இதனையடுத்து யூனியன் சேர்மன் பதவி திமுகவிற்கு உறுதியானது. இந்நிலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று காலை ஒன்றியக்குழு தலைவரை தேர்தெடுப்பதற்கான கூட்டம் நடந்தது.

தேர்தல் அதிகாரிகளாக சிவகங்கை உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) விஜயநாதன் தலைமையில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் திமுக உறுப்பினர்கள் சோ.சண்முகவடிவேல், சு.கருப்பையா, லெ.சரவணன், ரா.கலைமாணமி, க.ராமசாமி, வெ.மீனாள், ந.சகாதேவன், க.ராமேஸ்வரி ஆகியோரும், காங்கிரஸ் உறுப்பினர் ப.பாக்கியலெட்சுமியும், அதிமுக உறுப்பினர்கள் வ.ஜெயபாரதி, சே.கலைமகள் மற்றும் சுயேச்சை உறுப்பினர் க.பழனியப்பனும் பங்கேற்றனர். இதில் ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கு திமுக சார்பில், ஒன்றிய செயலாளர் சோ.சண்முகவடிவேல் மனுத்தாக்கள் செய்தார். இவரை எதிர்த்து யாரும் மனுத்தாக்கல் செய்யாததால், சண்முகவடிவேல் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

பின்னர் மாலை நடந்த ஒன்றியக்குழு துணைத்தலைவர் பதவிக்கு வெ.மீனாள் மனுத்தாக்கல் செய்தார். இவரை எதிர்த்து யாரும் மனுத்தாக்கல் செய்யாததால், வெ.மீனாள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதில் அதிமுக மற்றும் சுயேச்சை உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை. தெர்ந்தெடுக்கப்பட்ட யூனியன் சேர்மன் மற்றும் துணை சேர்மனுக்கு ஊராட்சி ஒன்றியத்தின் சார்பில் அலுவலர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயராமன், சுமதி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்(பொது) செழியன் உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.

Tags : DMK ,president-vice-president ,Thirupputhur ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி