×

முத்துப்பேட்டை அருகே போக்குவரத்துக்கு லாயக்கற்ற முனக்காடு சாலை

முத்துப்பேட்டை, ஜன.10: போக்குவரத்துக்கு லாயக்கற்ற முனக்காடு சாலையை சீரமைக்க கோரி கோரிக்கை விடுத்து, வெறுத்துப்போன இளைஞர்கள் சாலையில் அரசமர கன்றை நடவு செய்து முகநூலில் பதிவிட்டு அதிகாரிகளை கலாய்த்து வருகின்றனர். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த தொண்டியக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட தொண்டியக்காடு, மேலதொண்டியக்காடு, முனங்காடு ஆகிய கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அரசின் அடிப்படை வசதிகள் மிகவும் பின்தங்கிய பகுதியாக இருக்கும் இங்கு அதிகளவில் விவசாயம், மீன்பிடி ஆகியவை தொழிளாக கொண்டு உள்ளனர். அதனால் அன்றாடும் வேலை பார்த்தால்தான் ஒரு வேலை சாப்பாடு என்ற நிலையில் இப்பகுதி மக்கள் உள்ளனர். அதனால் அரசின் திட்டங்களை கேட்டு பெறுவதில் இப்பகுதி மக்களால் முடிவதில்லை. இந்த நிலையில் இந்த கிராமத்திற்கு என உள்ள இடும்பாவனம் கிராமத்திலிருந்து பிரிந்து கற்பகநாதற்குளம் கிராமத்தில் துவங்கி முனாங்காடு வழியாக தொண்டியக்காடு வரையில் உள்ள சுமார் 4கிலோ மீட்டர் தூரம் உள்ள முனங்காடு சாலை சுமார் 12 வருடங்களுக்கு முன்பு போடப்பட்ட சாலையாகும். அப்பொழுது சாலை போடும்போதே போதிய தரமில்லாமல் போடப்பட்டதால் சாலை நெடுகிலும் ஜல்லிகள் பெயர்ந்து குண்டும் குழியுமாக மாறியது.

அதன் பின்னர் தொடர் மழை, சென்றாண்டு கஜா புயல் போன்ற இயற்கை சீற்றத்தால் சாலை மேலும் சேதமாகி மக்கள் நடந்து செல்லக்கூட முடியாதளவில் பள்ளம் படுங்குழியாக உள்ளது. இதில் சென்ற ஆண்டு இப்பகுதி பொதுமக்களின் தொடர் கோரிக்கையால் சாலையை சீரமைக்க ரூ.6 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் அந்த நிதியை அதிகாரிகள் சாலையை சீரமைக்காமல் நூறுநாள் பணியாளர்கள் மூலம் சாலையோரம் உள்ள கருவை முட்களை அகற்றுகிறோம் என்ற பேரில் செலவு செய்து அத்துடன் முடித்துக் கொண்டனர். ஆனால் சாலையை முழுமையாக சீரமைக்க எதுவும் நடைபெறவில்லை. இதன் வழியாக தான் பொதுமக்கள் வெளியூர் செல்லவும், மாணவ -மாணவிகள் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லவும் பயன்படுத்தி வருகின்றனர். அதேபோல் விவசாய கூலித்தொழிலாளர்கள் மீனவர்கள் அதிகளவில் இவ்வழியில் சென்று வருகின்றனர். இப்படி முக்கியத்துவம் உள்ள இந்த சாலை பல்லாங்குழி போன்று இருப்பதால் நடந்து கூட செல்ல முடியவில்லை.

இந்நிலையில் இந்த வழியாக ஊருக்குள் சென்று வந்த ஒரு தனியார் பேருந்தும் இந்த மோசமான சாலையை கண்டு போக்குவரத்தை நிறுத்திக்கொண்டது. இதனால் இப்பகுதி மக்கள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று பேருந்துகளில் சென்று வருகின்றனர். இதுகுறித்து இப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றனர் ஆனாலும் அதிகாரிகளோ அலைச்சியப்படுத்தி வருகின்றனர். இதனால் வெறுப்படைந்த அப்பகுதி இளைஞர்கள் சமீபத்தில் சாலையை சீரமைக்காத அதிகாரிகளை கண்டித்து சேதமான சாலையை உடன் சீரமைக்க வலியுறுத்தி சாலையில் உள்ள பள்ளங்களில் மரக்கன்றுகளை நட்டு தங்களது பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு அதிகாரிகளை கலாய்த்து வருகின்றனர். இச்சம்பவம் முத்துப்பேட்டை அடுத்த தொண்டியகாடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில் இது இப்பகுதி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. இருந்தும் அதிகாரிகள் தரப்பில் மவுனம் தொடர்வதால் தற்பொழுது புதியதாக பொறுப்பேற்று இருக்கும் ஊராட்சி நிர்வாகம் உடன் இதனை துரிதப்படுத்தி சாலையை சீரமைத்து தரவேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Muthupettu ,
× RELATED முத்துப்பேட்டை அருகே தண்ணீர் லாரி மோதி 2 பேர் படுகாயம்