×

மேலக்கருவேலங்குளம், கரிசூழ்ந்தமங்கலத்தில் திருவாதிரை தேரோட்டம்

களக்காடு, ஜன. 10: களக்காடு அருகே மேலக் கருவேலங்குளத்தில் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சவுந்தரபாண்டீஸ்வரர், கோமதி அம்பாள் கோயில் அமைந்துள்ளது. தமிழகத்தில் நடராஜர் எழுந்தருளியுள்ள பஞ்சஸ்தலங்களில் ஒன்றாகவும், பச்சையாற்றின் கரையில் உள்ள பஞ்சலிங்க ஸ்தலங்களில் ஒன்றாகவும் திகழும் சிறப்பு வாய்ந்த இந்த கோயிலில் திருவாதிரை ஆருத்ரா தரிசன திருவிழா, கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 9ம் நாளான நேற்று தேரோட்டம் நடந்தது. இதையொட்டி சவுந்தரபாண்டீஸ்வரர், கோமதி அம்பாள், ஆனந்தநடராஜர், சிவகாமி அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. தொடர்ந்து சவுந்தரபாண்டீஸ்வரரும், கோமதி அம்பாளும் சிறப்பு அலங்காரத்தில் தேருக்கு எழுந்தருளினர். மாலை 6 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. இதில் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். ரத வீதிகளை சுற்றி வந்து தேர் நிலையை அடைந்தது. 10ம் நாளான இன்று அதிகாலை 6 மணிக்கு ஆருத்ரா தரிசனம் நடக்கிறது. இதேபோல் கரிசூழ்ந்தமங்கலத்தில் உள்ள பஞ்சஸ்தலங்களில் ஒன்றான கனகசபாபதி கோயிலில் மார்கழி மாத திருவாதிரை திருவிழா கடந்த 1ம் தேதி தொடங்கியது. இக்கோயிலில் தேர் பழுதடைந்து இருந்ததால், கடந்த 35 ஆண்டுகளாக திருவாதிரை தேரோட்டம் நடைபெறவில்லை.இந்நிலையில் புதிய தேர் செய்யப்பட்டு 35 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. காலை 9 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து நிகழ்ச்சி நடந்தது. இதில் சுவாமி புதிய தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் இரவு 7 மணிக்கு பூம் பல்லாக்கு வைபவம் நடந்தது. திருவாதிரை நாளான இன்று காலை 5 மணிக்கு கோ பூஜையும், தொடர்ந்து ஆருத்ரா தரிசனமும் நடக்கிறது. இக்கோயிலில் இருந்த தேர் பழுதடைந்து இருந்ததால் கடந்த 35 ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறவில்லை.

Tags : Thiruvathirai Therottam ,
× RELATED ஆவுடையார்கோவில் ஆத்மநாதசுவாமி கோயிலில் மார்கழி திருவாதிரை தேரோட்டம்