×

கொள்ளிடம் ஆற்றுப்பாலத்தில் படிக்கட்டுகளை சூழ்ந்துள்ள செடிகளால் பொதுமக்கள் அச்சம்

கொள்ளிடம், ஜன.10: கொள்ளிடம் ஆற்றுப்பாலத்தில் படிக்கட்டுகளை சூழ்ந்துள்ள செடி மற்றும் மரக்கன்றுகளை அகற்றக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.நாகை மாவட்டம் கொள்ளிடம் சோதனைச் சாவடிக்கு அருகே துவங்கி ஒரு கிலோ மீட்டர் தொலைவில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் கடந்த 1957ம் ஆண்டு துவக்கி வைக்கப்பட்டது. சென்னையிலிருந்து கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி வழியாக கன்னியாகுமரிக்குச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த பாலத்தின் வழியே இரவும், பகலும் 24மணி நேரமும் இலகு ரக வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரை சென்று கொண்டேயிருக்கும். ஒரு வினாடி கூட இடைவெளியின்றி வாகனங்கள் இந்த பாலத்தின் வழியே செல்கின்றன.இந்த பாலத்தின் துவக்கப்பகுதியில் ஆற்றுக்குள் இறங்கி செல்லும் வகையில் 20 மீட்டர் தூரத்திற்கு படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த படிக்கட்டுகள் வழியே எளிதில் ஆற்றுப்பகுதிக்குள் சென்று வரலாம்.

கடந்த 5 வருடங்களாக படிக்கட்டுகளை மரக்கன்றுகள், செடி, கொடிகள் மற்றும் புதர் வளர்ந்து சூழ்ந்துள்ளதால் படிக்கட்டுகளின் வழியே ஆற்றுப்பகுதிக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மிகவும் அவசர நிலை ஏற்பட்டால் பாலத்தில் உள்ள படிக்கட்டுகளின் வழியே அவசியம் செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.படிப்பட்டுகளை செடிகள் புதர்போல் மண்டிக்கிடப்பதால் அவற்றில் விஷ ஜந்துக்கள் இருக்கலாம் என்ற அச்சத்தில் பொதுமக்கள் செல்ல பயப்படுகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி பயன்படாமல் உள்ள படிக்கட்டுகளை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் படிக்கட்டுகளை சூழ்ந்துள்ள மரக்கன்றுகள் மற்றும் செடி, கொடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Tags : plants ,stairwell ,Kolli River ,
× RELATED பீட்ரூட் கீரை மசியல்