×

சென்னை செல்ல வசதியாக மானாமதுரை வரை வருமா பல்லவன்? பயணிகள் எதிர்பார்ப்பு

சிவகங்கை, ஜன.9: காரைக்குடியில் இருந்து சென்னை செல்லும் பல்லவன் ரயிலை மானாமதுரை வரை நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. சிவகங்கை வழியே இருந்த ரயில்வே மீட்டர் கேஜ் பாதை அகற்றப்பட்டு கடந்த 2008ம் ஆண்டு அகல ரயில்பாதையாக மாற்றப்பட்டது. சிவகங்கையிலிருந்து சென்னை, திருச்சி, மன்னார்குடி, விருதுநகர், ராமேஸ்வரம், கன்னியாகுமரி, கோவை, புதுச்சேரி, புவனேஸ்வர், வாரணாசி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னைக்கு தினந்தோறும் இரவு 7.45 மணிக்கு ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், 10.45 மணிக்கு சேது எக்ஸ்பிரஸ் என இரண்டு ரயில்கள் இயக்கப்படுகின்றன. வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் இரவு 8.45 மணிக்கு சிலம்பு எக்ஸ்பிரஸ் சென்னைக்கு இயக்கப்படுகிறது. ராமேஸ்வரம் மற்றும் சேது எக்ஸ்பிரஸ் ராமேஸ்வரத்திலிருந்தும், சிலம்பு எக்ஸ்பிரஸ் மானாமதுரையிலிருந்தும் சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி வழியாக சென்னை செல்கிறது. தற்போது சிவகங்கையிலுள்ள ஆயிரக்கணக்கான பயணிகள் சென்னை செல்ல ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். ஆனால் தினந்தோறும் இரண்டு ரயில்கள் மட்டுமே இயக்கப்படுவதால் எல்லா நாட்களிலும் டிக்கெட் கிடைப்பது அரிதாகவே உள்ளது. குறிப்பாக வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பயணம் செய்ய ரிசர்வேஷனில் டிக்கெட் கிடைப்பதில்லை.

இந்நிலையில் பல்லவன் ரயில் காரைக்குடியில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்டு வருகிறது. காலை 5 மணிக்கு காரைக்குடியில் இருந்து கிளம்பும் இந்த ரயில் பகல் 12.05 மணிக்கு சென்னைக்கு செல்கிறது. மீண்டும் பிற்பகல் 2.30 மணிக்கு சென்னையில் இருந்து கிளம்பி இரவு 8.30 மணிக்கு காரைக்குடி வந்தடைகிறது. இந்த ரயிலை சிவகங்கை வழியே மானாமதுரை வரை நீட்டிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. சிவகங்கை திமுக நகர் செயலாளர் துரைஆனந்த் கூறுகையில், சிவகங்கையிலிருந்து சென்னைக்கு கடந்த 50 ஆண்டுகளாக இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்களே இயக்கப்பட்டு வருகிறது. முன்பு சென்னை செல்ல லோக்கல் என்ற பெயரில் அனைத்து சிறிய ஸ்டேசன்களிலும் கூட நின்று செல்லக்கூடிய ஒரு ரயில் இயக்கப்பட்டு வந்தது. நள்ளிரவில் வரும் அந்த ரயிலிலும் கூட்டம் இருக்கும். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் அதுவும் நிறுத்தப்பட்டது. தற்போது சிவகங்கையிலிருந்து தொழில் மற்றும் அரசு அலுவல் ரீதியாக பயணம் செல்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் பெண் பயணிகளுடன் சென்றால் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். எனவே பல்லவன் ரயிலை மானாமதுரை வரை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். நடவடிக்கை இல்லை. உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : Chennai ,Manamadurai ,
× RELATED மானாமதுரை வீரஅழகர் கோயில் சித்திரை...