×

மன்னார்குடி அருகே மினிவேனில் திடீர் தீவிபத்து 4 பேர் காயமின்றி தப்பினர்

மன்னார்குடி, ஜன. 9:மன்னார்குடி அருகே மினி வேனில் திடீரென ஏற்பட்ட தீவிபத்தில் 4 பேர் காயமின்றி தப்பினர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே தென்பாதி கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர் (40). டிரைவர். சபரிமலைக்கு செல்வதற்கு மாலை அணிந்திருந்த இவர் நேற்று காலை மன்னார்குடி களவாய்க்கரை அருகில் உள்ள சக்திவேல் முருகன் ஆலயத்தில் இருந்து சபரி மலைக்கு செல்வதற்கு திட்டமிட்டு அதிகாலையில் அங்கு சென்று விட்டார். சபரிமலை செல்லும் ராஜசேகரை வழியனுப்ப தந்தை லோகநாதன் (60), தாயார் வசந்தா (53), மனைவி மகேஸ்வரி (35), சகோதரர் ராமச்சந்திரன் ஆகியோர் தங்களுக்கு சொந்தமான மினி வேனில் தென்பாதி கிராமத்தில் இருந்து மன்னார்குடிக்கு வந்தனர். அப்போது சேரன்குளம் கிராமம் அருகே வந்தபோது வேனின் முன்புறத்தில் இருந்து திடீரென புகை வந்துள்ளது. அதனை தொடர்ந்து வேன் தீப்பிடித்து ஏறிய துவங்கியது.

இதனால் அதிர்ச்சியடைந்த டிரைவர் வேனை சாலையில் நிறுத்தினார். வேனில் வந்த 4 பேர்களும் சமயோசிதமாக காயமின்றி இறங்கி தப்பினர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு மன்னார்குடியில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அரை மணிநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் தீயில் வேன் முழுவதும் எரிந்து நாசமானது. இதன் மதிப்பு சுமார் 2.50 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.இதுகுறித்து மன்னார்குடி இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், எஸ்ஐ சிவகுகன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Mannargudi ,
× RELATED மன்னார்குடி அருகே மதுபோதையில் தகராறு...