×

கோயம்பாக்கம், மேல்கொண்டையார் கிராமங்களில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும்: பூந்தமல்லி எம்எல்ஏ கிருஷ்ணசாமி பேச்சு

சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பூந்தமல்லி ஆ.கிருஷ்ணசாமி (திமுக) பேசியதாவது: பூந்தமல்லி தொகுதி திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியம், கோயம்பாக்கம், மேல்கொண்டையார் ஆகிய கிராமங்களில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க அரசு முன்வருமா?அமைச்சர் சி.விஜயபாஸ்கர்: திருவள்ளூர் ஒன்றியத்தினுடைய மக்கள் தொகைக்கு ஏற்ப கல்யாணகுப்பம், பெருமாள்பட்டு, புலியூர் என 3 ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு கொண்டிருக்கின்றன. அந்த மக்கள் தொகைக்கு ஏற்ப அங்கு செயல்பட்டு கொண்டிருக்கிற அந்த ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மேல் புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைப்பதற்கு தற்போது சாத்திய கூறுகள் இல்லை. ஆ.கிருஷ்ணசாமி: அமைச்சர் கூறிய அந்த மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றால் 5லிருந்து 10 கிலோ மீட்டர் செல்ல வேண்டிய கஷ்டங்கள் இருக்கின்றன. எனவே, அமைச்சர் அந்த இடத்தில் ஒரு மருத்துவமனை கொண்டுவர ஆவன செய்வாரா? அமைச்சர் சி.விஜயபாஸ்கர்:

அந்த 2 கிராமங்களிலும் மக்கள் தொகை குறைவாக உள்ளது. மக்கள் தொகை அளவீடு விவரப்படி குறைவாக உள்ளது. இருந்தாலும் வருங்காலங்களில் உறுப்பினருடைய கோரிக்கை அரசால் கனிவோடு ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும். ஆ.கிருஷ்ணசாமி: கல்யாணகுப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தில், அதை அறிவிக்கிறபோது முதல்வர் 30 படுக்கை மருத்துவமனை என்று அறிவித்தார். ஆனால் அந்த மருத்துவமனையில் 10 படுக்கை கூட கிடையாது. அது மாத்திரமல்லாமல், அங்கிருக்கக்கூடிய ஆரம்ப சுகாதார நிலையங்களில் தற்போது டெங்கு காய்ச்சல் வந்த போது, ஒவ்வொரு மருத்துவமனைக்கும் சென்றேன். 5 முதல் 10 படுக்கை தான் உள்ளது. ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் கிடையாது.

மருத்துவர்கள் தங்குவதற்கான விடுதி கிடையாது. செவிலியர்கள் தங்குவதற்கான விடுதி கிடையாது. போதுமான அளவில் சவுகரியங்கள் கிடையாது. இரவு மருத்துவர்கள் கிடையாது. இதையெல்லாம் நிறைவேற்ற இந்த அரசு முன்வருமா? அமைச்சர் சி.விஜயபாஸ்கர்: கோரிக்கையை அரசு கனிவோடு பரிசீலனை செய்யும். துறையில் வேகமான வளர்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இன்னும் என்ன வேண்டுமென்று கேளுங்கள். இவ்வாறு விவாதம் நடந்தது.

Tags : health centers ,villages ,Coimbatore ,Poonthalli MLA Krishnasamy ,
× RELATED கோவை மாநகராட்சி நீச்சல் குளத்தில் குவியும் சிறுவர்கள்