×

உதவித்தொகை பெற வேலை வாய்ப்பற்றோர் விண்ணப்பிக்க அழைப்பு

கிருஷ்ணகிரி, ஜன.8: வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: படித்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து, வேலைவாய்ப்பு கிடைக்காமல் 5 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கும் இளைஞர்களின் நலனுக்காக மூன்றாண்டு காலத்திற்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற பொதுப்பிரிவினர் மற்றும் ஆதிதிராவிடர்களை பொறத்தவரை 31.12.2019க்குள் உரிய கல்வித் தகுதிகளை வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்து 5 ஆண்டு காலமும், 31.12.2019ம் தேதி நிலவரப்படி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் 45 வயதிற்கு மிகாமலும், ஏனையோரை பொறுத்த மட்டில் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். தற்போது அரசாணைப்படி மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ₹72 ஆயிரத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மனுதாரர் அரசு அல்லது தனியார் நிறுவனங்களின் வாயிலாக எந்தவிதமான நிதி உதவித்தொகையும் பெறுபவராக இருத்தல் கூடாது. மனுதாரர் அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் மாணவ, மாணவியராக இருத்தல் கூடாது. இந்நிபந்தனை தொலைதூரக் கல்வி அல்லது அஞ்சல் வழிக் கல்வி கற்கும் மனுதாரர்களுக்கு பொருந்தாது. மேற்கண்ட தகுதியுடைவர்கள், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வேலைவாய்ப்பு அடையாள அட்டையுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், உதவித்தொகை பெறும் பயனாளிகள் அனைவரும் ஆதார் அட்டை நகல் மற்றும் குடும்ப அட்டை நகலினை உடனடியாக அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். ஓராண்டு முடிவுற்றவர்கள் சுய உறுதிமொழி ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும். சுய உறுதிமொழி ஆவணம் கொடுத்தவர்களுக்கு மட்டும் தொடர்ச்சியாக உதவித்தொகை 12 காலாண்டுகள் வழங்கப்படும். இதுவரை சுய உறுதிமொழி ஆவணம் கொடுக்காத நபர்களுக்கு மீதமுள்ள காலாண்டிற்கான உதவித்தொகை வழங்கப்படமாட்டாது. இதனை தவிர்க்கும் பொருட்டு, வேலைவாய்ப்பகத்தில் உரிய படிவத்தில் சுய உறுதிமொழி ஆவணம், வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகைக்கான ஒப்புகைச் சீட்டு, வேலைவாய்ப்பு அடையாள அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மாற்றுத்திறனாளி புத்தக நகல் மற்றும் வங்கிப்புத்தகத்தில் மைக்ரோ கோட், ஐஎப்எஸ்சி கோட், பிரான்ச் கோட் முத்திரையிடப்பட்ட நகலை சமர்ப்பித்து இத்திட்டத்தின் கீழ பயனடையலாம். இவ்வாறு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED சுயமரியாதை இயக்க விழா பொதுக்கூட்டம்