×

மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது பேருந்துகள் இயக்கப்படும்: கலெக்டர் அறிவிப்பு

புதுக்கோட்டை,ஜன.8: தொழிற்சங்கங்கள் இன்று நடத்தும் போராட்டத்தின்போது, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வழக்கம்போல் பேருந்துகள் இயக்கப்படும் என்று கலெக்டர் உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார். தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள வேலை நிறுத்தத்தின் போது பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி தலைமை வகித்தார். மாவட்ட எஸ்பி அருண்சக்திகுமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலெக்டர் உமாமகேஸ்வரி கூறியதாவது: இன்றைய தினம் சில தொழிற்சங்கங்களால் அறிவிக்கப்பட்டுள்ள நாடு தழுவிய வேலை நிறுத்தத்தையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பேணி பாதுகாக்கும் வகையில் பொதுமக்கள் கூடும் இடங்கள், பேருந்து நிலையங்கள், பேருந்து வழித்தடங்கள், கடை வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போதுமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளான குடிநீர் வசதி, காய்கறிகள், பால், உணவுப்பொருட்கள், பெட்ரோல் உள்ளிட்டவைகள் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி கிடைக்கும் வகையில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைத்து போக்குவரத்து பணிமனைகளிலும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, பொதுமக்களின் நலன் கருதி அனைத்து பேருந்துகளும் வழக்கம் போல் இயங்குவதை அலுவலர்கள் உறுதிசெய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களின் அன்றாட பணிகளில் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் வழக்கம் போல் தங்களது பணிகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார். இக்கூட்டத்தில் டிஆர்ஓ சரவணன், முக்கிய அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags : Collector ,announcement ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...