×

அரியலூர் அருகே வீட்டு கதவை உடைத்து மிளகாய் பொடி தூவி 20 பவுன் ரூ.4.50 லட்சம் கொள்ளை

அரியலூர், ஜன. 8: அரியலூர் அருகே வீட்டு கதவை உடைத்து மிளகாய் பொடிகளை தூவி விட்டு 20 பவுன் நகை மற்றும் ரூ.4.50 லட்சம் கொள்ளையடித்து சென்ற 2 வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர். அரியலூர் காமராஜர் நகரில் வீடு ஒன்றின் உள்ளே புகுந்த இரண்டு இளைஞர்கள் சினிமா படபாணியில் மிளகாய்பொடியை தூவி, 20பவுன் தங்கநகை மற்றும் நாலரைலட்ச ரூபாய் பணத்தை திருடிச்சென்றுள்ளனர். அருகில் வசிப்பவர்கள் பிடிக்க முயன்றபோது தப்பியோடிய அந்தநபர்கள் உள்ளுர் இளைஞர்கள் என்று கூறியதையடுத்து போலிசார் அவர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அரியலூர் காமராஜர் நகரில் உள்ள வாடகை குடியிருப்பில் 2வது மாடியில் தனது மகனுடன் வாசுகி (35) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தம்பி மனைவியின் வளைகாப்பு நிகழ்ச்சிக்காக குடும்பத்தினருடன் கடந்த 2ம் தேதி சிதம்பரம் சென்றுள்ளார். இவர் வீட்டில் வளர்க்கும் நாய்க்கு முதல் மாடியில் வசிப்பவர்களை உணவு வைக்குமாறு கூறி விட்டு சென்றனர். கடந்த 2 நாட்களாக நாயை காணவில்லை. இதனால் நேற்று இரவு 7 மணியளவில் முதல்மாடியில் வசிப்பவர்கள் வீட்டுக்கு நாய் திரும்பி வந்து விட்டதா என்று பார்ப்பதற்காக சென்றனர். அப்போது 2 பேர், வாசுகியின் வீட்டில் இருந்து வெளியே வந்தனர்.

இதை பார்த்து வீட்டுக்கு சென்றவர்கள் சத்தம் போட்டனர். அப்போது அருகில் இருப்பவர்கள் வருவதற்குள் 2 வாலிபர்களும் தப்பியோடிவிட்டனர். பின்னர் வீட்டு கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தை பார்த்து வாசுகிக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர்கள் அளித்த தகவலின்பேரில் நேற்று இரவே தனது வீட்டுக்கு வாசுகி பார்த்தார். அப்போது வீட்டு படுக்கை அறையில் வைக்கப்பட்டிருந்த 20 பவுன் நகைகள் மற்றும் ரூ.4.50 லட்சத்தை 2 வாலிபர்களும் திருடி சென்றது தெரியவந்தது. மேலும் வீட்டின் கதவு மற்றும் படுக்கையறை ஆகிய இடங்களில் மிளகாய்பொடி தூவப்பட்டிருந்தது. இதையடுத்து வாசுகி அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. நேற்று இரவு மாடியில் இருந்த தப்பித்து சென்றவர்கள் உள்ளூரை சேர்ந்த வாலிபர்கள் என்ற அருகில் இருந்தவர்கள் கூறியதன் அடிப்படையில் வாலிபர்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Tags : house ,Ariyalur ,
× RELATED வெள்ளை மாளிகை கேட் மீது மோதிய கார் டிரைவர் பலி