×

பனிப்பொழிவு, ஜி.எஸ்.டி. பிரச்னையால் ஜவுளி மார்க்கெட்டில் பொங்கல் விற்பனை மந்தம்

ஈரோடு, ஜன.8: பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் பனிப்பொழிவு, ஜி.எஸ்.டி. பிரச்னையால் ஈரோடு ஜவுளி மார்க்கெட்டில் ஜவுளி விற்பனை நேற்று மந்தமாகவே காணப்பட்டது. ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள கனி மார்க்கெட் ஜவுளிசந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி கடைகள், வாரக்கடைகள் என ஆயிரக்கணக்கான கடைகள் உள்ளது.  வாரந்தோறும் திங்கள்கிழமை இரவு துவங்கி செவ்வாய்கிழமை இரவு வரை நடைபெறும் வாரச்சந்தையில், ரூ.3 கோடி அளவிற்கு வர்த்தகம் இருக்கும். பண்டிகை காலங்களில் இது ரூ.5 கோடி அளவிற்கு இருக்கும். மத்திய அரசு கொண்டு வந்த ஜி.எஸ்.டி. பிரச்னையால் ஜவுளி தொழில் தற்போது தள்ளாடி வருகிறது. குறிப்பாக, துணி ரகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி.யால், துணிகளின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

இதனால், வெளிமாநில மற்றும் உள்ளுர் மொத்த வியாபாரிகள் ஜவுளிகளை கொள்முதல் செய்ய தயக்கம் காட்டி வருகின்றனர். பண்டிகை கால விற்பனை மற்றும் சில்லரை விற்பனை மட்டுமே நடந்து வருகிறது.பொங்கல் பண்டிகை அடுத்த வாரம் கொண்டாடப்பட உள்ள நிலையில் விற்பனை அதிகரிக்கும் என வியாபாரிகள் எதிர்பார்த்தனர். ஆனால், நேற்று நடந்த சந்தையில் விற்பனை மந்தமாகவே இருந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த மார்க்கெட்டில் 75 சதவீதம் விற்பனை இருந்தது. ஆனால் நேற்று நடந்த சந்தையில் 40 சதவீதம் மட்டுமே விற்பனை இருந்தது. பனிப்பொழிவு மற்றும் ஜி.எஸ்.டி. பிரச்னையால் விற்பனை குறைந்து போனதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags :
× RELATED கோடை விடுமுறையில் குவியும் சுற்றுலா...