×

தமிழக அரசு மத்திய பாஜ அரசுக்கு வால் பிடிக்கிறது: ஜவாஹிருல்லா பேச்சு

திருப்போரூர், ஜன. 8: மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தும் குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறக்கோரி எதிர்க்கட்சிகள் சார்பில் கேளம்பாக்கம் - வண்டலூர் சந்திப்பில்  பிரமாண்ட ஆர்ப்பாட்டம் நடந்தது. கேளம்பாக்கம் ஊராட்சி திமுக அவைத் தலைவர் முத்தலிப் தலைமை தாங்கினார். தமுமுக கேளம்பாக்கம் கிளை தலைவர் முகமது சுல்தான் வரவேற்றார். மமக மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு, மண்டல செயலாளர் சூ.க.விடுதலைச் செழியன், மாவட்ட செயலாளர் ராஜ்குமார், திருப்போரூர் எம்எல்ஏ இதயவர்மன், அடையாறு மசூதி தலைமை இமாம் சதீதுத்தின் பாகவி, தமுமுக தலைமை கழக பேச்சாளர் சலீம்கான், செங்கல்பட்டு மாவட்டத் தலைவர் ஜாகீர் உசேன் உள்பட ஏராளமானோர் கண்டன உரையாற்றினர். இதில், மமக மாநில தலைவர் ஜவாஹிருல்லா பேசியதாவது:

மத்திய பாஜ அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த மசோதா அனைத்து தரப்பு மக்களுக்கும் எதிரானது. இந்திய நாட்டின் வரலாற்றிலேயே இப்போதுதான் பொய்யை மட்டுமே பேசும் பிரதமரையும், உள்துறை அமைச்சரையும் நாம் பெற்றிருக்கிறோம். இது நமது துரதிருஷ்டம். இந்தியா முழுவதும் எழுந்துள்ள இந்த எதிர்ப்பை கருத்தில் கொண்டு இந்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், கேரள முதல்வர் பினராயி விஜயனும் இந்த சட்டத்தை மாநில அளவில் அமல்படுத்த மாட்டோம் என அறிவித்து சட்டமன்றத்திலும் தீர்மானம் இயற்றினர்.

ஆனால், தமிழக சட்டமன்றத்தில் இதைப்பற்றி விவாதிக்கக் கூட அனுமதிக்காமல் இந்த அரசு மத்திய பாஜ அரசுக்கு வால் பிடிக்கிறது. நாளை (இன்று) சென்னை விமான நிலையத்தில் முற்றுகை போராட்டம் நடக்க உள்ளது. இந்தியா முழுவதும் பரவியுள்ள இந்த போராட்டம் இன்னும் வலுப்பெறும். இந்த சட்டத்தை திரும்பப் பெறும் வரை போராட்டங்கள் தொடரும் என்றார். முடிவில் அப்துல் சுபான் நன்றி கூறினார். முன்னதாக இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் எதிரொலியாக கேளம்பாக்கத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. செங்கல்பட்டு எஸ்பி கண்ணன், மாமல்லபுரம் கூடுதல் எஸ்பி சுந்தரவதனம் ஆகியோர் பாதுகாப்பு பணியை அவ்வப்போது ஆய்வு செய்தனர்.

Tags : Tamil Nadu ,BJP ,
× RELATED தேர்தல் முடிவுக்குப் பிறகு மேலே...