×

ஸ்மார்ட் கார்டு தொலைந்து விட்டதா? உறுப்பினர் ஆதார் மூலமும் பொங்கல் பரிசு பெறலாம் வரும் 9ம் தேதி முதல் விநியோகம்

திண்டுக்கல், ஜன. 7:திண்டுக்கல் மாவட்டத்தில் வரும் 9ம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகிக்கப்பட உள்ளதாக கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்ட கலெக்டர்  விஜயலட்சுமி தெரிவித்திருப்பதாவது: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கார்டுதாரர்களுக்கு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் உலர்திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய், 2 அடி நீள கரும்புத்துண்டு ஆகியவை அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசுத்தொகுப்புடன், ரூ.1,000 பணம் வழங்கப்பட உள்ளது. இதையடுத்து திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மொத்தம் 6,23,456 குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசுத்தொகுப்பினை பெற்று பயனடைய உள்ளனர். வரும்  9ம் தேதி முதல் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் பணத்தை பெற்றுக்கொள்ளலாம். தினமும் 200 முதல் 300 நபர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இந்த விபரம் ஒவ்வொரு ரேஷன் கடையிலும் குறிப்பிடப்பட்டிருக்கும்.

ஸ்மார்ட் கார்டு தொலைந்து போன ரேஷன் கார்டுதாரர்கள், அவர்களின் கார்டில் இடம் பெற்றுள்ள ஏதேனும் ஒருவரின் ஆதார் அட்டையினை வைத்தோ, பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணிற்கு வரும் ஓடிபி அடிப்படையில் பொங்கல் பரிசுத் தொகுப்பினை பெற்றுக் கொள்ளலாம். பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடர்பாக பொதுமக்கள் புகார் எதுவும் தெரிவிக்க விரும்பினால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் கட்டுப்பாட்டு அறையில் உள்ள 0451-2460097 என்ற தொலைபேசி எண்ணிற்கு தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED அரசு பஸ் டிரைவர்களுக்கு சர்க்கரை கரைசல் வழங்கல்