×

சென்னையில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பணிக்கே வராமல் சம்பளம் பெறும் சூபர்வைசர்கள்: கண்டுகொள்ளாத நிர்வாகம்

பெரம்பூர்: தமிழகத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. அனைத்து கடைகளிலும் மதுவகைகள் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைவைத்து விற்பனை செய்வது வாடிக்கையாக உள்ளது. இதுகுறித்து நாள்தோறும் தலைமை அலுவலகத்திற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட புகார்கள் வருகின்றன.  அதன்பேரில், மதுபானங்களில் 10 ரூபாய் கூடுதல் விலை வைத்து விற்றால் 10 ஆயிரம் அபராதமும், விற்பனை குறைவான கடைகளுக்கு பணிமாறுதலும் செய்யப்படுவார்கள் என நிர்வாகம் எச்சரித்தது. ஆனாலும், கூடுதல் விலை வைத்து விற்பனை செய்வது குறைந்தபாடில்லை.  ஒவ்வொரு டாஸ்மாக் கடையிலும் குறைந்தது 30 பேர் முண்டியடித்துக் கொண்டு மது வாங்குகின்றனர். குறிப்பாக, மாலை 6 மணி முதல் கடை மூடும் நேரமான இரவு 10 மணிவரை குறைந்தது 10க்கும் மேற்பட்டவர்கள் முட்டி மோதி மது பாட்டில்களை வாங்குகின்றனர்.

இதனால், நெரிசலை தவிர்க்க, விற்பனை குறைவாக உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு ஒரு சூபர்வைசர், 4 விற்பனையாளர்கள் மற்றும் ஒரு உதவியாளரும், விற்பனை அதிகமாக உள்ள கடைகளுக்கு 2 சூபர்வைசர்கள், 6 விற்பனையாளர்கள் மற்றும் 2 உதவியாளர்களும், படு ஜோராக விற்பனை ஆகும் கடைகளுக்கு கூடுதலாக விற்பனையாளர்களையும் டாஸ்மாக் நிர்வாகம் நியமித்துள்ளது. ஆனால், இவர்கள் முறையாக பணிக்கு வருவதில்லை. உதாரணமாக 6 விற்பனையாளர்கள் 2 சூபர்வைசர்கள் உள்ள கடையில் நாள் ஒன்றை இரண்டாக பிரித்தால் கடையில் எப்போதும் 3 விற்பனையாளர்கள் மற்றும் ஒரு சூபர்வைசர் இருக்க வேண்டும். ஆனால் பெரும்பாலான கடையில் பகல் நேரத்தில் ஒரே ஒரு விற்பனையாளரும், இரவு நேரத்தில் சில கடைகளில் 2 விற்பனையாளர்களும் மட்டுமே பணிபுரிகின்றனர். சூபர்வைசர்கள் எங்கே செல்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என தெரியவில்லை.

அதுமட்டுமின்றி, ஒரு நாள் வேலை, 2 நாட்கள் விடுமுறை என தங்களுக்கென ஒரு கால அட்டவணை தயாரித்து சென்னையில் பல சூபர்வைசர்கள் வீட்டில் இருந்தவாறே சம்பளம் பெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத டாஸ்மாக ஊழியர் ஒருவர் கூறுகையில், ‘‘அனைத்து கடைகளிலும் சூப்பர்வைசராக இருப்பவர்கள் கடை பக்கமே வருவதில்லை. ஆனால், கடையின் விற்பனையாளர் மூலம் மதுபாட்டில்கள் மீது கூடுதல் விலை வைத்து விற்பனை செய்வதற்கு மட்டும் உத்தரவிடுகின்றனர். அதன்மூலம் வரும் பணத்தை, உயர் அதிகாரிகளுக்கு மாதம்தோறும் கொடுப்பதாக கூறினாலும், சூபர்வைசர்கள் பெரிய அளவில் கல்லா கட்டுகின்றனர். ஒவ்வொரு கடையிலும் வருகை பதிவேடு வைத்து ஊழியர்கள் விவரத்தை அதில் பதிவு செய்ய வேண்டும், என டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளுக்கு திடீரென சோதனை செய்ய வரும் உயரதிகாரிகள் அந்த வருகை பதிவேடுகளை சரிபார்ப்பது வழக்கம்.

ஆனால் சமீப காலமாக சென்னையில் சோதனை என்ற பெயரில் வரும் உயரதிகாரிகளை சூபர்வைசர்கள் சரிகட்டி விடுகின்றனர். வருகை பதிவேட்டையும் தங்களுக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்கின்றனர். இதனால், சூபர்வைசர்கள் வேலைக்கே வராமல், தங்களது தனிப்பட்ட தொழில்களை சுதந்திரமாக செய்து வருகின்றனர். மாதம்தோறும் சம்பளத்தையும் வாங்கி சொகுசு வாழ்க்கை நடத்துகின்றனர். கூட்டம் அதிகம் உள்ள கடைகளில் கூட ஒரு விற்பனையாளர்  மட்டுமே பணியில் இருப்பதால் பணிச்சுமை ஏற்படுகிறது. எனவே, இதுகுறித்து உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றார்.

எதுவும் செய்ய முடியாது
குடிமகன்கள் கூறுகையில், ‘‘டாஸ்மாக் கடைகளில் அனைத்து மது பாட்டிலுக்கும் கூடுதலாக பணம் வசூலிக்கின்றனர். குறிப்பாக, ஒரு பீர் பாட்டில்களுக்கு 10 முதல் 20 வீதமும், பிராந்தி வகைகளுக்கு 5 முதல் 40 வரையும் கூடுதலாக வசூலிக்கின்றனர். இதுகுறித்து கடை ஊழியர்களிடம் கேட்டால், நாங்கள் கரண்ட் பில் கட்டவேண்டும். போலீசுக்கு தரவேண்டும். மேலதிகாரிகளுக்கு தரவேண்டும் என கூறுகின்றனர். அதுமட்டுமின்றி, அவர்களே புகார் எண்ணை கொடுத்து தாராளமாக  எங்கு வேண்டுமானாலும் புகார் செய்து கொள்ளுங்கள். லோக்கல்  காவல்துறை தொடங்கி, டாஸ்மாக் உயரதிகாரிகள், ஆளும்கட்சியின் வட்ட  செயலாளர் தொடங்கி அமைச்சர் வரை அனைவருக்கும் மாதாமாதம் கொடுக்க வேண்டியதை  கொடுத்து வருகிறோம். அதனால் எங்களை யாரும் எதுவும் செய்யமுடியாது என்கின்றனர். எனவே, டாஸ்மாக் கடைகளில் நடக்கும் இந்த கொள்ளையை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.


Tags : Supervisors ,Task Shops ,Chennai ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...