×

பழமையான கோயில் சிலை உரியவரிடம் ஒப்படைப்பு

பெரம்பூர்: பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் 150 ஆண்டு கால பழமை வாய்ந்த தண்டுமாரியம்மன் கோயில் இருந்தது. சாலை விரிவாக்கம் செய்வதற்காக மாநகராட்சி அதிகாரிகள்  கடந்த ஆகஸ்ட் மாதம் அந்த கோயிலை இடித்தனர்.     கோயிலில் இருந்த அம்மன் சிலை உட்பட 30க்கும் மேற்பட்ட சுவாமி சிலைகள்  மற்றும் பொருட்கள் சென்னை திருவிக நகர் மண்டல அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தது.  இது சம்பந்தமாக கோயில் நிர்வாகிகள் ஒரு பிரிவினர் சென்னை உயர் நீதிமன்றம் வழக்கு தொடர்ந்தனர். அதில், கோயிலில் உள்ள பொருட்கள் எங்களுக்கு சொந்தமானது, அதை எங்களுக்கு வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.  இதற்கிடையில் கோயில் பொருட்கள் எங்களுக்குத்தான் சொந்தம் என மற்றொரு தரப்பு  மனு தாக்கல் செய்தது.  இதை முழுமையாக விசாரித்து, அந்த பொருட்களை உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.

அதன்பேரில் அறநிலையத்துறை விசாரணை நடத்தி 150 வருட பழமையான அந்த கோயில் பொருட்களை  கோயில் தர்மகர்த்தாவாக இருக்கும் கோதண்டம் (65)  என்பவரிடம் ஒப்படைக்க வேண்டும் என சென்னை திருவிக நகர் 6வது மண்டல அதிகாரிக்கு  உத்தரவிட்டது.  அதன்படி, நேற்று கோதண்டம் மற்றும் அவரை சேர்ந்தவர்களிடம் பெரம்பூர் தாசில்தார் விஜயசாந்தி, திருவிக நகர் ஆறாவது மண்டல அதிகாரி நாராயணன்,  செயற்பொறியாளர் செந்தில்நாதன், உதவிப் பொறியாளர் சிவப்பிரியா முன்னிலையில் அனைத்து பொருட்களும் சரிபார்த்து உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.  சிலைகளை பெற்றுக்கொண்ட தரப்பினர் விரைவில் அதே பகுதியில் ஒரு நல்ல இடம் பார்த்து கோயில் கட்டி அங்கு பொதுமக்களுக்காக சுவாமி சிலைகள் பிரதிர்ஷ்டை செய்யப்படும் என தெரிவித்தனர்.

Tags :
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...