×

கோவை குற்றாலத்துக்கு போதையில் வந்தால் அனுமதி இல்லை

கோவை, டிச.31: கோவை குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் குடிபோதையில் இருந்தால் உள்ளே செல்ல அனுமதியில்லை என மாவட்ட வன அலுவலர் தெரிவித்துள்ளார். கோவை சாடிவயல் பகுதியில் கோவை குற்றாலம் அமைந்துள்ளது. இங்குள்ள நீர்வீழ்ச்சியில் வருடம் முழுவதும் தண்ணீர் வரும். இதனால், கோவை மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். சாடிவயல் செக் போஸ்டில் இருந்து அடர் வனப்பகுதி வழியாக நீர்வீழ்ச்சிக்கு செல்ல வேண்டும். சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நீர்வீழ்ச்சி பகுதிக்கு வனத்துறையினர் வாகனத்தில் மட்டுமே அழைத்து செல்லப்படுகிறது. மேலும், குற்றாலத்தில் காதல் ஜோடிகள் வனத்திற்குள் செல்வதை தடுக்க பல்வேறு இடங்களில் கேமரா மூலம் காண்காணிக்கப்பட்டு வருகிறது.

பெண்கள், குழந்தைகள் அதிகளவில் வருவதால் குடி போதையில் உள்ளவர்கள் குற்றாலத்திற்கு செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. ஆங்கில புத்தாண்டு தினத்தையொட்டி பலர் குற்றாலம் அருவிக்கு வர வாய்ப்பு உள்ளது. இதனை கருத்தில் கொண்டு குடிபோதையில் வரும் சுற்றுலா பயணிகளை அருவிக்கு செல்ல அனுமதி இல்லை என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  இது குறித்து மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் கூறியதாவது: கோவை குற்றாலத்திற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குற்றாலத்திற்குள் மது அருந்த யாருக்கும் அனுமதியில்லை. குடித்துவிட்டு அருவியில் தவறான செயல்களில் ஈடுபட்டால், சம்மந்தப்பட்ட நபர்கள் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்படுவார்கள். எனவே, குடித்துவிட்டு குற்றாலத்திற்கு வர வேண்டாம். புத்தாண்டையொட்டி, கூடுதல் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Goa Courtallam ,
× RELATED கோவை குற்றாலத்துக்கு போதையில் வந்தால் அனுமதி இல்லை