×

ஒருவந்தூர் பஞ்.,தலைவர் தேர்தலில் மோதல் அபாயம்

நாமக்கல், டிச.31: ஒருவந்தூர் பஞ்சாயத்து  தலைவர் தேர்தலில் காலை முதல் மாலை வரை பதட்டம் நீடித்து மோதலாக மாறும் சூழ்நிலை உருவானது. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒருவந்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவி, இம்முறை பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் செல்ல.ராசாமணியின் மனைவி அருணா, வழக்கறிஞர் கைலாசத்தின் தாய் நாச்சியம்மாள் ஆகிய இருவரும், தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர். இந்த ஊராட்சி மன்ற தலைவராக ஏற்கனவே செல்ல.ராசாமணி, கைலாசம் இருவரும் தலா ஒரு முறை பதவி வகித்துள்ளனர். இருவரும் நெருங்கிய உறவினர்கள். தற்போது இருவரும் தங்களது  குடும்பத்தில் இருந்து, வேட்பாளர்களை  நிறுத்தியிருந்தனர். மணல் லாரி தலைவர் செல்ல.ராசாமணி தனது மனைவிக்கு ஆதரவாக கடந்த இரு வாரமாக கிராமம், கிராமமாக சென்று வாக்கு சேகரித்தார். பிரசாரத்தின் கடைசி நாளில், இரு தரப்பினரும் தங்கள் ஆதரவாளர்களுடன் கிராமம், கிராமமாக ஊர்வலமாக சென்றனர்.

 வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் தொடர்பாக, நேற்று முன்தினம் இரவு இரு தரப்பினரிடையே கைகலப்பு ஏற்படும் சூழல் உருவானது. இதையடுத்து, நேற்று வாக்குப்பதிவு நடைபெற்ற 3 வாக்குச்சாவடி முன்பும், ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். கிராம மக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். வண்டி, வாகனங்களில் ஆட்களை இருதரப்பினரும் அழைத்து வந்த வண்ணம் இருந்தனர். டிஎஸ்பிக்கள் மணிமாறன், காந்தி, இன்ஸ்பெக்டர் சுகுமார் ஆகியோர் தொடர்ந்து, ஒருவந்தூரில் முகாமிட்டு வாக்குச்சாவடி அருகில் கூட்டம் கூடாமல் தடுத்து வந்தனர். நேற்று மதியம் 1 மணியளவில், ஒருவந்தூர் அரசு துவக்கப்பள்ளி வாக்குச்சாவடி முன்பு, வாகனத்தில் உறவினர்களை வாக்குசாவடிக்கு அழைத்து வந்து ஓட்டு போட வைப்பது தொடர்பாக, இருதரப்பினருக்கும் இடையே திடீர் தகராறு மூண்டது. அப்போது மணல் லாரி தலைவர் செல்ல.ராசாமணி, கூட்டுறவு வங்கி தலைவர் பாலசுப்பிரமணி ஆகியோர் ஆதரவாளர்களுடன் வந்தனர். இதே போல, வக்கீல் கைலாசமும் தனது ஆதரவாளர்களை அழைத்து வந்தார். இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கு வந்த இன்ஸ்பெக்டர் சுகுமார், டிஎஸ்பி காந்தி இருவரும் வாகனங்களில் யாரும் அழைத்து வந்து ஓட்டு போட வைக்ககூடாது. தாய், தந்தையரை அழைத்து வருவதை யாரும் தடுக்க கூடாது என கூறி, இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இருப்பினும் நேற்று  மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடையும் வரை ஒருவந்தூரில் பதட்டமும், பரபரப்பும் நிலவியது.

Tags : conflict ,election ,
× RELATED விருதுநகர் அருகே இருதரப்பினர் மோதலில் 9 பேர் மீது வழக்கு