×

முதியவர்களுக்கு உதவுவது போல் நடித்து ஒரு தரப்புக்கு சாதகமாக வாக்களிப்பதாக புகார்

தர்மபுரி, டிச.31: தர்மபுரி அருகே ஊராட்சி தலைவர் பதவி ஏலம் நடந்த பனைகுளம் ஊராட்சியில், முதியவர்களுக்கு உதவுவது போல் நடித்து, தங்களுக்கு சாதகமாக வாக்களிப்பதாக எழுந்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டது.பென்னாகரம் தாலுகா, பாப்பாரப்பட்டி அருகே உள்ள பனைகுளம் ஊராட்சியில் திருமல்வாடி, வத்திமரத்துஅள்ளி, பனைகுளம் ஆகிய கிராமங்களை உள்ளடக்கியுள்ளது. இந்நிலையில், பனைகுளம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு கடந்த 10ம் தேதி, திருமல்வாடியில் ஊர் பிரமுகர்கள் முன்னிலையில் நடந்த கூட்டத்தில் ஏலம் நடந்தது. அதே பகுதியை சேர்ந்தவர் ₹24 லட்சத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் பதவியை ஏலம் எடுத்தார். இந்ததகவல் பென்னாகரம் தேர்தல் அலுவலர்களுக்கு தெரியவந்ததும், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஊர் பெரியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், ஏலம் நடத்தி ஊராட்சி மன்ற தலைவர் பதவியை விற்பனை செய்வது தெரியவந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்தனர்.

இதையடுத்து, பனைகுளம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு, நேற்று நடந்த தேர்தலில் பனைகுளத்தை சேர்ந்த பழனியம்மாள் மற்றும் திருமல்வாடியை சேர்ந்த மேனகா என 2பேர் போட்டியிட்டனர். திருமல்வாடி வாக்குசாவடியில் வயதானவர்களுக்கு உதவுவது போல், ஒரு தரப்பு வேட்பாளர்களின் ஏஜென்டுகள் தங்களுக்கு சாதமாக ஓட்டு போட்டதாக புகார் எழுந்தது. இதனால், அந்த வாக்குசாவடியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. வேப்பிலைஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட சொரக்காப்பட்டியிலும் இதே போல் முதியவர்களின் ஓட்டுகளை, வேறு நபர்கள் போடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் அதிவிரைவு படை போலீசார் சொரக்காப்பட்டி, திருமல்வாடி ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று, அங்கு கூட்டமாக நின்றிருந்தவர்களை விரட்டி அடித்தனர். பாப்பாரப்பட்டி அருகே பனங்கள்ளி கிராமத்திலும், முதியவர்களுக்கு உதவுவது போல், அவர்களது ஓட்டை வேறு நபர்கள் போடுவதாக புகார் எழுந்தது.

Tags : elderly ,
× RELATED பெரியபாளையம் பேருந்து நிலையத்தில்...