×

தென்காசியை சேர்ந்த 2 பேர் மஸ்கட்டில் சிக்கி தவிப்பு

தென்காசி, டிச.31:  தென்காசி மாவட்டத்தில் மலையன்குளம் மற்றும் சொக்கம்பட்டி ஆகிய ஊர்களைச் சேர்ந்த 2 இளைஞர்கள் வெளிநாட்டில் சிக்கி தவிப்பதாகவும் அவர்களை மீட்டு தாயகம் அழைத்து வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து மூன்று வாரங்களாக கலெக்டரின் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் உறவினர்கள் வலியுறுத்தினர்.  தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் தாலுகா மலையன்குளம் கிராமத்தைச் சேர்ந்த ரெங்கசாமி மகன் கந்தசாமி  (33). தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகா சொக்கம்பட்டியைச் சேர்ந்த முத்துப்பாண்டியன் மகன் பூலித்துரை (29) ஆகிய இருவரும் வறுமை காரணமாக தனியார் ஏஜெண்டுகள் மூலம் மஸ்கட் நாட்டிலுள்ள ஒரு எலக்ட்ரிகல் கம்பெனியில் பணியில் சேர்ந்துள்ளனர். சுமார் ஒரு வருட காலம் பணிபுரிந்து வந்த நிலையில் திடீரென மூன்று மாதங்களாக கம்பெனியிலிருந்து வெளியே அனுப்பி சம்பளம் கொடுக்க மறுத்து வருவதாகவும், வேறு ஒரு நபரிடம் சப்கான்ட்ராக்ட் பணிக்கு அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. அந்த சப்கான்ட்ராக்ட் நிறுவனத்தினர் சுமார் 40 கிமீ  தொலைவுள்ள சாலையில் இவர்கள் இரண்டு பேரை மட்டும் வைத்து மின்கம்பங்களை நட்டு கம்பி இழுக்க வைத்துள்ளனர். உதவிக்கு பணியாளர்களும் தர மறுத்துள்ளனர். இரண்டு இளைஞர்களுக்கும் அங்கு உள்ள தட்பவெட்ப நிலையில் தொடர்ந்து வேலை செய்ய முடியாமல் கதறி உள்ளனர்.

  இதுகுறித்து அந்த நிறுவனத்தின் அதிகாரிகளாக பொறுப்பு வகித்து வரும் கேரளாவைச் சேர்ந்த பொறியாளர்களை அணுகி முறையிட்டுள்ளனர். அவர்களும் இருவரது முறையீட்டையும் புறம் தள்ளி அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. மேலும் மன ரீதியாக பல சித்திரவதைக்கும் ஆளாகி உள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். இருவரும் சொந்த நாட்டுக்கு திரும்ப பாஸ்போர்ட் கேட்டு கம்பெனி நிர்வாகத்தை அணுகியபோது அவர்கள் பாஸ்போர்ட்டை கொடுக்காமல் சம்பளப்பணத்தையும் கொடுக்காமல் துரத்தி உள்ளதாக தெரிகிறது.   இதுகுறித்து அவரது உறவினர்கள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தென்காசி மாவட்ட ஆட்சியரின் குறைதீர்க்கும் நாள் முகாமில் மனு கொடுத்தனர். இந்நிலையில் மூன்றாவது வாரமாக நேற்றும் மலையன் குளத்தை சேர்ந்த கந்தசாமி தாயார் கிருஷ்ணவேணி மற்றும் மனைவி குழந்தைகள் மூன்று பேர் குறைதீர்க்கும் நாள் முகாமில் மனு கொடுத்தனர்.  இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘மூன்று மாதங்களாக சம்பளம் வழங்காததுடன் ஒரு அறையில் அடைத்து வைத்து உணவு கொடுக்க மறுத்து வருகின்றனர். அவரை மீட்க  தற்போது அரசு உடனடியாக  தாயகம் அழைத்து வர ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.  மலையன் குளத்தைச் சேர்ந்த கந்தசாமிக்கு மாரீஸ்வரி என்ற மனைவியும் கங்காதேவி (4 )  மித்ரா ( 2)  ஆகிய 2 மகள்களும் நவீன்குமார் ( 7 மாதம்) என்ற மகனும் உள்ளனர்.

தாய், மனைவி கண்ணீர்
வறுமையை போக்க வெளிநாட்டில் வேலைக்கு சென்று அங்கு போராடி வரும் கந்தசாமியை மீட்பதற்காக அவரது தாய் கிருஷ்ணவேணி, மனைவியின்  நிலை பரிதாபமாக உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘முதல் நாள் கூட்டத்தில் அவர்கள் மனு கொடுத்த உடனேயே இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு தகவல் அனுப்பி விட்டோம். அவர்களை மீட்டு கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் என்று தெரிவித்தனர்.

Tags : Tenkasi ,Muscat ,
× RELATED மின்னல் தாக்கி மாணவர் பலி